மாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி….ருத்திரன்-

தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டமானது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு மேட்டுக்குடியினரின் கைளிலும், சுதந்திரத்திற்கு பின்னர் மேட்டுக்குடியினர் மற்றும் மத்திய தர வகுப்பினர்களின் கைகளிலும், 1970 களுக்கு பின்னர் மத்திய தர இளைஞர்களின் கைகளிலும் குடிகொண்டது. முன்னையவர்கள் தங்களது கல்வி அறிவையும், செல்வத்தையும் கொண்டு பிரித்தானியரிடம் பேரம் பேசி தமது உரிமைகளை வென்றுவிடலாம் என்று நினைத்திருந்தனர். இருப்பினும், அவர்களது எண்ணங்கள் முழுவதும் காலனி ஆதிக்கத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதிலையே குவிந்திருந்தது. ஆறு கடக்கும் வரை அண்ணன், தம்பி. ஆறு கடந்த பின் நீயாரோ, நான்யாரோ என்னும் அனுபவ மொழிக்கு ஏற்ப சிங்கள தேசியம் தமிழ் தேசிய இனத்தை அடிமைப்படுத்த தொடங்கியது. இந்த அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து தமது இருப்பையும், அடையாளத்தையும், காத்துக் கொள்வதற்காக அடுத்த தலைமுறை மிதவாதத்தில் போராட்டத்தை முன்னெடுத்தது. அந்த மிதவாத தன்மை அரச பயங்கரவாதத்தினால் ஆயுத முனையில் அடக்கப்பட்டதைக் கண்டு தமது தலைவர்களுக்கு நேர்ந்த அவமதிப்பையும், இனத்திற்கு நேர்ந்த அவல நிலையையும் கண்டு இளம் தலைமுறையினர் ஆயுதமேந்தி போராடினர்.

மிதவாத தலைவர்களின் சகிப்புத் தன்மை எல்லை கடந்து சென்று இனி சிங்கள தேசியத்துடன் கைகோர்த்து பயணிக்க முடியாது என்ற நிலையை அடைந்த பின்னர் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமாக மிதவாத தலைமையினால் இறைமையுள்ள தனியரசான தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை அவர்களால் செயற்படுத்த முடியாமையின் காரணமாக இளைஞர்கள் தமது கைகளில் அந்தப் போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு முன்னோக்கி நகர்ந்தனர். இதன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் மீதான அடக்கு முறையும் வன்முறையும் ஓரளவுக்கு கட்டுப்பட்டிருந்தது என்பதுடன் தமிழர் தாயகத்தில் வலிந்து மேற்கொள்ளப்பட்டிருந்த சிங்கள குடியேற்றமும், நிறுத்தப்பட்டிருந்தது. இத்தகைய ஆயுதப் போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டது.

1987 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த ஆண்டு கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மரணித்த சங்கரை நினைவு கூரும் வகையில் 1989 ஆம் ஆண்டு முதல் அதே கார்த்திகை 27 ஐ மாவீரர் தினமாக தமது இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு மரணித்தவர்களின் நினைவாக அனுஸ்டி வந்தனர். 1989 முதல் 2008 வரை மிகவும் உணர்வு பூர்வமாகவும், தமிழ் தேசிய இனத்தின் அடிமைத்தளையை அகற்றிட வேண்டும் என்ற வேட்கையுடனும், அதற்கு திடசங்கற்பம் பூணும் தினமாகவும் அன்றைய நாள் அனுஸ்டிக்கப்பட்டு வந்தது. உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் சக போராளித் தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்த அந்த சூழல் ஒரு உணர்வு மிக்கதாகவும், தமது இனத்தின் விடுதலைக்காக தமது பிள்ளைகள் ஏதோ ஒரு விதத்தில் பங்காற்றியிருக்கிறார்கள் என்று அந்த பெற்றோர்களும், உறவினர்களும பெருமிதம் கொண்டிருந்தனர். தனித்தனிய அவர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும் ஒரு கூட்டு நிகழ்வில் அவர்கள் அந்த துயரத்தை மறந்து பெருமிதம் கொண்டவர்களாகவே தெரிந்தனர்.

2009 மே மாதத்திற்கு பின்னர் பல்வேறு முகாம்களிலும், தடுப்பு காவல்களிலும் கூட அந்தப் போராளிகள் மாவீரர் தினத்தை அந்த சூழலுக்கு ஏற்ப சூட்சுமமான முறையில் அனுஸ்டித்துள்ளனர். இதனைப் போன்றே மக்களும் வீடுகளிலும், ஆலயங்களிலும், பிரத்தியேக இடங்களிலும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு, கிழக்கின் பல்கலைக்கழக சமூகம் அனைத்து அச்சுறுத்தல்களையும் கடந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். கடந்த ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினருடைய வெற்றியை கொண்டாடுவதற்கு அரசாங்கம் ஒவ்வொரு இடத்தை தேர்வு செய்திருந்தது. ஒட்டுமொத்த தீவில் எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற சிங்கள, பௌத்த பேரினவாத ஆளும் வர்க்கம் தமிழ் தேசிய சிறுபான்மை இனத்தின் உரிமைகளை மறுத்து தனது காலடியின் கீழ் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு எதிராகவே தமிழ் தேசிய இனம் வீறு கொண்டு எழுந்திருந்தது. இவ்வாறு எழுந்து போராடிய இளைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்களாகவே அந்த சமூகம் கருதியது. ஆனால் 2009 இற்கு பின்னர் அரசாங்கம் அவர்களை நினைவு கூருவது மீண்டும் புலிகளை மீள் உருவாக்குவதாக அமையும் என்று கூறி தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தி அந்த நினைவு கூரலை இருப்புக்கரம் கொண்டு அடக்கியது.

மரணித்துப் போன தமது உறவுகளை கூட்டாகவே, தனியாகவோ வீடுகளிலோ, பொது இடங்களிலிலோ, நினைவு கூருவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை மறுப்பது என்பது அடிப்படை மனிதவுரிமை மீறல் என்று சர்வதேச சமூகம் இடித்துரைத்ததன் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் பின்னர் நினைவு கூருவதை அரசாங்கம், கண்டும் காணாமல் விட்டுள்ளது. கடந்த வருடம் இந்த அனுஸ்டிப்பானது அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்து. அதன் பின்னாலேயே மக்களும் சென்றிருந்தனர். இது ஒரு விதத்தில் மக்களுக்கு தைரியம் ஊட்டுவதாகவும் இருந்தது. இருப்பினும், அரசியல்வாதிகள் ஏதோ தம்மை தாமே விடுதலைப் புலிகளின் தலைவராக பாவித்துக் கொண்டு முதன்மைச் சுடரை ஏற்றி வைத்து வீரவசனங்கள் பேசுவதாக எண்ணி சர்ச்சைகளுக்குள்ளும் சிக்கிக் கொண்டனர். இதன் காரணமாகவே இந்த முறை மாவீரர் தினமானது மீண்டும் பழைய முறைக்கு திரும்பி உறவினர்களினதும், நண்பர்களினதும், சமூகத்தினதும் உணர்வு பூர்வ தினமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

அரசியல் வாதிகளை நம்பிப் பயனில்லை என்று முடிவெடுத்து எப்படி மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தாமே போராடி வருகின்றார்களோ அதேபோல் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வினையும் தாமே ஒழுங்கமைத்து ஒரு சுயகட்டுப்பாட்டுடன் யார் முதன்மைச் சுடரை ஏற்றுவது என்பதில் கூட ஒரு தீர்க்கமான முடிவெடுத்து சுடரேற்றியவரின் குடும்பத்திற்கும், அவர்கள் மூலமாக ஒவ்வொரு போராளிக்கும் தமது உணர்வு பூர்வ அஞ்சலியை செலுத்தியிருந்தனர். இதில் ஒவ்வொருவரும் கௌரவிக்கப்பட்டிருந்தனர். ஒரு சிறு சலசலப்பு கூட இல்லாமல் இந்நிகழ்வு நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததை அறிய முடிகிறது.

இந்த வருடம் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வைப் பார்க்கின்ற பொழுது நவீன உலகத்தின் தொழில்நுட்ப உதவியின் மூலமாக மிக எளிதாக அனைவரையும் ஒன்றிணைக்க முடியும் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இந்த உணர்வு பூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டு தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியவர்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தவிடத்தில் ஒன்றை நினைவுபடுத்துவதும் இதற்கு துணைபுரிவதாக அமையும். ஒரே இயக்கத்தில் ஒன்றிணைந்து போராடி வித்தாகியவர்களை நினைவுகூருவதற்கு ஒன்றிணைத்ததைப் போலவே சக போராளிகள், சரணடைந்த பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருக்கிறார்களா?, அவர்களுக்கு என்ன நடந்தது? என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக சுமார் ஒருவருட காலமாக அவர்களது உறவுகள் வீதிகளில் இறங்கி நியாயம் கேட்டு வருகின்றனர். அரசாங்கம் இன்று வரை அவர்களுக்கு உரிய பதிலை வழங்காது இருக்கின்றது. மாவீரர் குடும்பங்களின் உறவுகளையும் ஒன்றிணைத்து அதனூடாக ஒட்டுமொத்த சமூகத்தையும் இணைப்பதன் ஊடாக அந்த மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அஞ்சலிக்காக உழைத்தவர்கள் நீதி, நியாயம் கோருவதற்காகவும் முன்வர வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினதும், காணி விடவிப்புக்காக காத்திருப்போரினதும், நீதி விசாரணையின்றி அரசியல் காரங்களுக்கதாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளினதும் அவர்களது உறவினர்களினதும் எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் இதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறுவது சிறப்பானதாக இருக்கும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்