இனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றியதை சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம்? அனந்தி சசிதரன்!

தமிழர்களை இனவழிப்பு செய்த சிறிலங்கா இராணுவத்தையும் அதற்கு கட்டளைகளை வழங்கி வழிநடத்திய தலைவர்களையும் காப்பாற்றியதே நல்லாட்சி அரசின் கடந்த மூன்று ஆண்டுகால சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று தன்னை சந்தித்த சர்வதேச பத்திரிகையாளரிடம் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜொஹான் மைக்கெல்சனிற்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்…

ஆட்சி மாற்றம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு போரினால் ஏற்பட்ட பக்கவிழைவுகளே. எனவே புனர்வாழ்வு, அபிவிருத்தியை காரணம்காட்டி நிரந்தரத் தீர்வை காலங்கடத்துவதனை ஏற்கமுடியாது. இனவழிப்பு போர் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதனை இப்போதும் நீடிக்கும் விதத்திலேயே இன்றைய அரசின் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மின்சாரக் கதிரை பற்றிய அச்சம், சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைப் பொறிமுறை மற்றும் சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்குள் வரவழைத்தல் போன்ற விடயங்கள் நல்லாட்சிக் காலத்தில் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை நாட்டின் குடிமக்களான தமிழர்களை கொன்றொழித்ததுடன் அதற்கான பொறுப்புக் கூறலையும் நிராகரித்து வருவதன் மூலம் ஒன்றுபட்ட நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்ற அறைகூவல் வெறும் வார்த்தையே என்பதை நிரூபித்துள்ளார்கள்.

தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் சிங்கள மக்களையும் சிங்கள அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் போக்கிலேயே இன்றைய நல்லாட்சி அரசும் பயணித்து வருவதனை மைத்திரிபால சிறிசேனவின் மேற்குறித்த அறிவிப்பு துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது.

நாட்டின் ஆட்சியாளர்களே இவ்வாறு வெளிப்படையாக கூறிவரும் நிலையில் அழித்தொழிக்கப்பட்டு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் எமக்கான நீதியை எவ்வாறு இவர்களிடம் எதிர்பார்க்க முடியும்? நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக் கூறும் விடயத்தில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணை அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகளும் இன அழிப்பு போரிற்கு நேரடி, மறைமுக உதவிகளை வழங்கிய அமெரிக்கா, இந்தியா, ரைசியா, சீனா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கடப்பாடு உடையவர்களாக இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல், பொருளாதார நலன்களை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனங்களை கண்டுகொள்ளாது இருப்பதானது மென்மேலும் அதே பாதையில் இலங்கை அரசாங்கம் பயணிப்பதற்கான ஏதுநிலையையே ஏற்படுத்தும். ஆகவே, சர்வதேச நாடுகளும் ஐ.நா. மன்றமும் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூறலின் வழியே தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தீர்வுகாண அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடாமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம்
உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் மக்களிடம் சென்று எதைச்
இராணுவ வசம் உள்ள வவுனியா கூட்டுறவு கல்லூரி கட்டிடத்தினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வட மாகாண கூட்டுறவு மற்றும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*