சம்பந்தன், சுமந்திரனின் சிங்கள விசுவாசத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தது

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் உருவாக்கப்பட்டு, தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தியா பரிணமித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு சிங்களத் தலைமை எடுத்த முயற்சிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி துணைபோயுள்ளது என தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழர்களின் அரசியல் பலமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதன் மூலம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை இல்லாதொழிக்க முடியும் என்ற நப்பாசையில் சிங்களத் தரப்பும் மேற்குலக சக்திகளும் சுமந்திரனை தமிழரசுக் கட்சிக்குள் புகுத்தின.

அதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்பட்டு, இன்று இந்த நிலைக்கு வந்திருக்கின்றது எனவும் மேற்படி செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் தமிழின ஏகபோக உரிமைச் செயற்பாடுகளுக்கும், அதனை ஒட்டிய நகர்வுகளுக்கும் அவர்கள் பலமான கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகளை உடைத்துச் சிதைப்பதன் மூலம் தமிழர்களின் விடுதலை நோக்கிய, சுதந்திரம் நோக்கிய நகர்வுகளை இல்லாதொழிக்க முடியும் என சிறிலங்காவின் உயர்பீடம் கருதியது. இதன் வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியுள்ளன எனவும் மேற்படி தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நீண்டகாலத் திட்டம். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி தனித்தே களமிறங்குவது என அக்கட்சியினர் ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர்.

இதன் ஒரு கட்டமாகவே, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி ஏற்கனவே வெளியேற்றப்பட்டது. தற்போது ரெலோ வெளியேறியிருக்கின்றது. இனிமேல் புளொட்டும் வெளியேறும் எனத் தெரியவருகின்றது. இவ்வாறு நடைபெற்றால் சிங்களத் தரப்பின் அனைத்து முயற்சிகளும் பூரண வெற்றிபெறும் எனவும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்களவர்களுக்கும் மேற்குலகின் சில சக்திகளுக்கும் விலைபோயுள்ள சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைத்துள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்