புதிய கூட்டமைப்பின் நோக்கம் என்ன? – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விளக்கம்

ஒரு தேர்தல் அரசியலுக்காக தமிழ் மக்கள் பேரவையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையை எதிர்க்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வியாழக்கிழமை) தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்ய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பொருத்தமான கட்சியல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பாக நாங்கள் விமர்சிக்கின்றோம் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை எதிர்க்கவேண்டும் என்பதற்காக அல்ல.

எங்களைப் பொறுத்தவரை கொள்ளை ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழை விடுகின்றது. நிச்சயமாக அரசாங்க தரப்புக்கு விலை போய் இருக்கின்றது.

தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாஷைகளை மீறுகின்ற வகையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டுவந்து தமிழ் மக்களிடம் விற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை எதிர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் இவ்வளவு தூரம் தியாகங்கள் செய்தும் ஒற்றையாட்சிக்கு ஆணையிடக்கூடாது. தற்போது இடைக்கால அறிக்கையொன்று வெளிவந்துள்ள நிலையில் இவை சந்தேகத்திற்கு அப்பால் உள்ள இடத்தில் இருக்கின்றது. இது நிச்சயமாக நடக்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளின் செயற்பாட்டை எதிர்த்து நிற்கவேண்டும்.

ஆகவே அந்தக் கொள்கைச் செயற்பாடுகள் பிழை என்பதைக் கூறி மாற்றுக் கூட்டுத்தலைமைத்துவத்தை உருவாக்கியிருக்கின்ற நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேருவது கொள்கை ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கமுடியாத நிலைக்குத் நாங்கள் தள்ளப்படுவோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில்தான் போட்டியிட்டோம்.

அதற்குப் பிற்பாடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் அவருடைய கட்சி உறுப்பினர்களும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மாறாக நிராகரித்துச் செயற்பட்டமையினாலும் அவர் தொடர்ந்தும் கொள்கை ரீதியாக ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்கின்ற விடயத்தாலும், குறிப்பாக 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாண சபை முறைமைகளை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.,

போன்றவற்றை வலியுறுத்துகின்ற காரணத்தாலும் வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை அதைப் பற்றிப் பேசவும் கூடாது என்ற கொள்கையை வலியுறுத்தியதாலும் எல்லாவற்றுக்கும் அப்பால் சுயநிர்ணயம் என்ற விடயம் ஒரு நிராகரிக்கப்படவேண்டிய ஒரு கொள்கையாக அவர் வெளிப்படுத்தி வருகின்ற கட்டத்தில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி சின்னத்தையும் கைவிட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் இயங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.

போர் நடைபெற்ற காலப்பகுதியிலும்கூட கொள்கை ரீதியாக எதிர்த்தது மட்டுமன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் கட்சியும் ஈ.பி.டி.பி. கட்சியும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் உலக நாடுகளுக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்திய போரை நியாயப்பத்தியவர் என்ற வகையில் அந்தக் கட்சியுடன் சேருவது.,

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சம்பந்தன் போன்றவர்கள் பேருக்காவது சமஷ்டியைப் பற்றிக் கதைக்கிறார்கள்.

தேர்தலில் வாக்கு எடுப்பதற்காகவாவது சுயநிர்ணய உரிமை பற்றி வடகிழக்கு இணைப்புப் பற்றி பேசுகிறார்கள். ஒற்றையாட்சியை நிராகரிக்கிறோம் எனப் பேசுகிறார்கள்.

ஆனால் இங்கு ஆனந்தசங்கரி இவற்றை நிராகரிக்கின்ற கொள்கை உடையவர்களுடன் சேருவது ஆரோக்கியமான நேர்மையான ஒரு கொள்கையை முன்னுக்குக் கொண்டு செல்ல முடியாது. மக்களை நேர்மையாக வழிநடத்தக் கூடிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்பமுடியாது. அப்படிப்பட்ட கூட்டு மக்களை ஏமாற்றுகின்ற கூட்டாகத்தான் இது மாறும்.

அதுமட்டுமல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய குற்றச்சாட்டு குறிப்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் வைக்கின்ற குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேருக்கு மட்டும்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கின்றதே தவிர தமிழரசுக் கட்சியில்தான் இருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் முடிவே கூட்டமைப்பின் முடிவாக இருக்கின்றது. தங்களுடைய கட்சி ஆதிக்கம் செலுத்தமுடியாது. தம்மை கணக்கெடுப்பதே இல்லை. ஆகவே தமிழரசுக் கட்சியின் சின்னத்திலோ பேரிலோ போட்டியிடமுடியாது. அது உண்மையான கூட்டமைப்பாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்று கூறியே அவர் வெளியேறினார்.

இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பேருக்குத்தான் கூட்டணி. தமிழரசுக்கட்சி போலவே அதுவும் ஒரு கட்சி. அக்கட்சியின் செயலாளர்தான் வீ.ஆனந்தசங்கரி அப்படிப்பட்ட நிலையில் இன்னுமொரு கட்சியின் பெயரிலும் சின்னத்திலும் போட்டியிடுவது என்பது கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பிரச்சினையை இங்கும் உருவாக்கப் போகின்றது.

நாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரிலும் சின்னத்திலும் போட்டிபோடுவதை காலம் தாமதிக்கப்பட்டநிலையில் கருத்துமுரண்பாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்வதென்று நாங்கள் பார்க்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவோடும், மேற்குலக நாடுகளினுடைய நிகழ்ச்சி நிரலில் இயங்கிக் கொண்டிருப்பதை நாங்கள் பல தடவை பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றோம்.

அந்த நிகழ்ச்சி நிரல் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கூட்டமைப்பினுடைய அரசியல் பாதை தமிழ்த் தேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தமிழ்த் தேசத்தினுடைய இருப்பை இல்லாமல் செய்கின்ற அளவிற்கு அவர்கள் விலை போயிருக்கிறார்கள் என்ற தெளிவான செய்தியை 2009 இற்குப் பிற்பாடு தெளிவாகக் கூறி வருகின்றோம்.

அக் கருத்துக்கள் படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் பேரவை மட்டுமன்றி வடமாகாண முதலமைச்சர் உட்பட பலர் அக் கருத்தை முற்றுமுழுதாக விளங்கிக் கொண்டு அந்த கூட்டை அம்பலப்படுத்துகின்ற நிலை உருவாகியிருக்கின்றது.

அந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக கொள்கை ரீதியாக எதிரான கருத்து மிகப் பெரிதாக வளர்ந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பாதுகாப்பு இல்லாது தமது சொந்த மக்களை சந்திக்கமுடியாதுள்ளது.

அப்படிப்பட்ட நிலையில் ஒரு மாற்றுத்தலைமை என்பது ஒரு புதிய நேர்மையான கொள்கையுடன் உறுதியாக இருக்கக்கூடிய புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அணியை நாங்கள் கட்டியெழுப்பிக் கொண்டு வருகின்றோம் என்று சொல்வது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமன்றி பொது அமைப்புக்கள் தமிழ் மக்கள் பேரவை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு உட்பட அதன் விளைவுதான் எழுக தமிழுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்.

அப்படிப்பட்ட நேர்மையான கொள்கையில் உறுதியான விட்டுக்கொடுப்பின்றிய செயற்படத் தயாராக இருக்கின்ற கூட்டு மாற்றுத் தலைமை உருவாகக்கூடாது என்ற தேவை இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமன்றி பல வல்லரசு நாடுகளுக்கும் இருக்கின்றது.

எவ்வளவு தூரம் தங்களுடைய நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நகர்த்தி அந்த நிகழ்ச்சி நிரல் அம்பலமாகி தமிழ்மக்கள் அந்த நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக கிளம்ப மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்கவேண்டும்.

கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடிய அரசியலில் நேர்மையாக இருக்கக்கூடிய தமிழ் மக்களுடைய நலனை மட்டும் கவனிக்கின்ற தரப்பிற்கு மாற்று அணியில் பிடி வைத்திருக்கக்கூடாது என்பதற்காகத் தான் ஆரோக்கியமான நேர்மையான கொள்கையில் இணக்கப்பாடுடைய ஒரு தூய்மையான மாற்று அணி உருவாகுவதைத் தவிர்ப்பதற்காகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துரதிஸ்டவசமாக சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏமாற்றி அத்தகைய முயற்சிக்கு அவரை துணைபோக வைத்திருக்கிறார்கள் என்பது எங்களுடைய பார்வை. ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் நாங்கள் மதிப்பு வைத்திருக்கின்றோம்.

அத்தகைய மதிப்பு இல்லாவிட்டால் அவர்களுடன் கூட்டுச் சேருவதற்கு இணங்கியிருக்கமாட்டோம். நாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருந்தோம்.

எங்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்கள் முக்கியமில்லை. தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் அணி தமிழ் மக்கள் பேரவைக்கு வந்தபிற்பாடு கொள்கை ரீதியாக சரியான நிலைமை ஒன்றை எடுக்க அவர்களுடன் சொந்தம் கொண்டாட எந்தவிதமான கூச்சமும் கிடையாது.

ஆனால் அப்படிப்பட்ட கொள்கையில் ஒன்றாக இணைந்து செயற்படக்கூடிய தரப்புக்களுடன் பலத்தை உருவாக்காமல் கொள்கைக்கு நேர்முரணாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமைத்துவத்திற்கு இருக்கக்கூடிய உத்தியோகபூர்வமாக இருக்கக்கூடிய கொள்கைக்கு நேர்எதிராக மிகவும் வெளிப்படையாக அந்தக் கொள்கைகள் அனைத்தையும் நிராகரிக்கின்ற.,

ஒரு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் போகலாம் என்றால் எம்மைப் பொறுத்தவரையில் சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி தமிழ்த் தேசிய விரோதிகள் செய்து முடித்திருக்கிறார்கள் என்பதே எம்முடைய கருத்து என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்