தமிழரசு கட்சியின் போக்கு ஆயுதப் போராட்டத்தை நலினப்படுத்துவதாக இருக்கின்றது!

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களும் சேர்ந்து ஒரு சரியான தலைமைத்துவத்தை உருவாக்கினால் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதித்துவம் நூறுவீதம் பாதுகாக்கமுடியும் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் மட்டக்களப்பில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி போட்டியிடுவது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு நேற்று(08) மட்டக்களப்பில் உள்ள கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்…..

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நலினப்படுத்துவதாக தமிழரசு கட்சியின் போக்கு அமைந்திருக்கின்றது.
எனவே தமிழர் விடுதலைக்கூட்டணியுடனான கூட்டு என்பது தமிழர்களை பலப்படுத்துவதற்கான கூட்டே தவிர யாரையும் பலவீனப்படுத்துவதற்கான கூட்டு அல்ல.

ஈழமக்கள் புரட்சிகர முன்னனிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையே ஏற்பட்ட கொள்கை ரீதியான முரண்பாடுகளும் தமிழரசுக் கட்சியின் ஒரு சிலரது செயற்பாடுகள் காரணமாகவும் மேலும் பல விடயங்களை உள்ளடக்கி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து கட்சி உருவாக்கியுள்ளோம்.

இதன் அடிப்படையில் தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர முண்ணனி, ஜனநாயக தமிழரசு கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழவர் ஜனநாயக அமைப்பு, என 5 கட்சிகளும் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக தீர்மானித்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஏறாவூர் பற்று பிரதேச சபை, ஏறாவூர் நகரசபை, கோறளைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றோம்.
7 சபைகள் உட்பட 1 பிரதேச சபைகளுக்கும் எதிர்வருகின்ற குறிப்பிட்ட தினங்களுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தி தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளோம்.

எமது கட்சி பெறுத்தமட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மண்முணைப்பற்று, பிரதேச சபையில் 2 இடங்களும், ஏறாவூர் நகரசபையில் இரண்டு இடங்களும், வாழைச்சேனையில் 3 இடங்களிலும் செங்கலடியில் ஒரு இடமும், பட்டிப்பளை பிரதேச சபையில் ஒரு இடமும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டுமாவடியில் ஒரு இடத்திலும் போட்டியிடவுள்ளது.

அதேவேளை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் வடமுனை., உண்ணிச்சை, ஊத்துச்சேனை. வாகனேரி, அதேபோல பட்டிப்பளை பிரதேச சபை கெவிலியாமடு, செங்கலடியில் மங்களகம, வாழைச்சேனையில் இரண்டு வட்டாரங்கள், ஏறாவூரில் இரண்டு வட்டாரங்கள், ஆரையம்பதியில் இரண்டு வட்டாரங்களில் என இந்த 6 பிரதேச சபைகளிலும் தமிழ் வேட்பாளர்கள் சில இடங்களில் இல்லாமல் போகக்கூடிய நிலை இருக்கின்றது.

எனவே இந்த உள்ளூராட்சி சபைகளிலுள்ள தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படகூடாது என்பதற்காக தமிழ் கட்சிகளுடன் பேசி உடன்படிக்கைக்கு வரத்தயாராக இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களும் சேர்ந்து ஒரு சரியான தலைமைத்துவத்தை உருவாக்கினால் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதித்துவம் நூறுவீதம் பாதுகாக்கமுடியும்.

எனவே தமிழர் போராட்டத்துடன் சம்மந்தப்பட்ட ஏனைய கட்சிகள் கிழக்கு மக்களின் கருத்தை வலுவடைய செய்வதற்கான செயற்பாட்டை எந்த விட்டுக் கொடுப்பையும் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கின்றோம் ஆனால் கொள்கையை விலைபேசி விற்பதற்கோ ஒரு சிலரின் நலனை பாதுகாக்கவே எந்த சந்தர்ப்பதிலும் இடமளிக்கமாட்டோம் என மேலும் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்