வல்வெட்டித்துறை கூட்டமைப்பிடமிருந்து பறிபோகின்றது!

வல்வெட்டித்துறை நகர சபை தேர்தலில் சுயேட்சை குழுவொன்று களமிறங்கி வெற்றிபெறலாமென எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது. வல்வெட்டித்துறை நகர சபைக்கு இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை, பிரஜைகள் குழுவின் தலைவராகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழு இன்று காலை 11 மணியளவில், யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.

தமிழீழ தேசியத்தலைவரது நெருங்கிய நட்பையும் மதிப்பினையும் பெற்றிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா பலதரப்புக்களதும் கோரிக்கைகளினையடுத்து தேர்தலில் தலைமை தாங்கி குதிக்க சம்மதித்திருந்தார்.

பட்டயக் கணக்காளரான செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் என எதிர்பார்க்கப்படும் மு. ஆனந்தராசா, த. சுந்தரலிங்கம், சற்குணபாலன் ஆகியோர் செல்வேந்திராவுடன் வந்து இன்று கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தனர்.

இதனிடையே சுயேட்சைக்குழுவிற்கு ஆதரவாக தமிழர் விடுதலைக்கூட்டணி தேர்தலை தவிர்க்கலாமென நம்பப்படுகின்றது.

இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபையினை இலக்கு வைத்து கூட்டமைப்பில் டெலோ களமிறங்க முற்பட்டுள்ளது.எனினும் வல்வெட்டித்துறை நகரசபை நிர்வாகத்தை உரியவகையில் நடத்த தவறியதாக குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கபட்டுள்ளது.இதனால் டெலோ இம்முறை வாக்குகளை அறுவடை செய்யமுடியாதென அவதானிகள் கருதுகின்றனர்.

கூட்டமைப்பிற்கான முதலாவது தோல்வி இம்முறை வல்வெட்டித்துறையிலிருந்து தொடங்கியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்