தமிழக மண்ணில் மீண்டும் ஒரு துரோகத்தை அனுமதிக்கப் போகின்றீர்களா – தமிழகத் தமிழர்ளே!? – ம.செந்தமிழ்.-ஈழ அதிர்வுகள் – 59.

தாயக மண்ணில் நிகழ்த்தி வரும் இன அழிப்பு நடவடிக்கை உலக அரங்கில் அம்பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சிங்கள அரசு அதனை முறியடிக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.

அதில் ஓரங்கமாக தமிழ் திரைப்படத் துறையை கையிலெடுத்துள்ளது சிங்கள பேரினவாத அரசு.

நாட்டை விற்று கொள்ளை அடித்த பணம் இதற்காக அலரி மாளிகையில் இருந்து கோடம்பாக்கத்திற்கு மடைமாற்றி விடப்பட்டுள்ளது.

சிங்கள கொலைகாரப் படைகளின் கோர முகம் உலகளவில் அம்பலப்பட்டு சிங்களம் அம்மனமாகி நிற்கின்ற நிலையில் அதனை மாற்றுவதற்கு திரைப்படத்துறை மூலமக முயற்சிக்கின்றது ராசபக்சே அரசு.

ஜப்னா, இனம் என்ற தமிழ்ப் படங்களின் மூலமும் சிங்கள ஆங்கிலத் திரைப்படங்கள் மூலமும் நேரடியாக சிங்கள இராணுவத்தையும் பௌத்த துறவிகளையும் காருண்யம் மிக்கவர்களாகவும் காட்ட முயற்சித்தது சிங்கள அரசு.

இப்போது தயாரிக்கப்பட்டு வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் புலிப்பார்வை திரைப்படமும் அதன் வரிசையில் வெளிவரும் நச்சுப்படைப்பாகவே தோன்றுகின்றது.

பாலச்சந்திரனின் அந்த பிஞ்சு முகம் உலகளவில் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்று சிங்களம் சந்தித்து நிற்கின்ற உலக நெருக்கடிகளிற்கு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அந்த நிலையை மாற்றி பாலச்சந்திரனின் படுகொலை போர்க்களத்தில் நடக்கும் வழக்கமான மரணங்களில் ஒன்றாக எண்ணவைக்கவே இந்த புலிப்பார்வை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது.

உண்மையில் பாலச்சந்திரன் ஆயுதப் போராட்டத்திற்கு மத்தியில் அதுவும் உலகின் சிறந்த விடுதலைப் போராளித் தலைவனின் மகனாக இருந்தபோதிலும் ஆயுதத்தின் வாசனையை முற்றிலுமாக வெறுத்தான் என்பது நம்பமறுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய பேருண்மையாகும்.

போராளிகளுக்கான நீச்சல் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்திருந்த பாலச்சந்திரனிடம் தளபதி ஒருவர் தனது கைத்துப்பாக்கியை கொடுத்தார். அங்கிருந்த அனைவரும் வியப்படையும் வகையில் கைத்துப்பாக்கியை வெறுப்புடன் தூக்கி நீச்சல் குளத்தில் வீசி எறிந்தான்.

எந்த மாமாவின் பெயரை இவனிற்கு வைத்தார்களோ அந்தத் தாய்மாமன் பாலச்சந்திரனின்(தாய் மதிவதனியின் தம்பி மாவீரன்-பாலச்சந்திரன்) கனவான பொறியியலாளராக ஆகவேண்டும் என்ற இலட்சியமே இந்த பாலச்சந்திரனிற்கு இருந்ததே தவிர ஒருபோதும் ஆயுதத்தின் மீதோ புலிச் சீருடையின் மீதோ துளியளவும் நாட்டம் இருந்ததில்லை என்பதே உண்மையாகும்.

பாலச்சந்திரனின் உண்மை வரலாறு இவ்வாறு இருக்க முழுமையான புலி வீரனாக காட்டி சயனைட் குப்பி அணிவித்து கையில் துப்பாக்கியோடு காட்டும் இவர்களின் நோக்கம்தான் என்ன?

பார்ப்பவர் கண்களிணூடாக உடலிற்குள் மின்சாரமாக ஊடுருவி உங்களை நம்பியிருந்தோமே… எம்மை இந்த நிலையில் கொண்டுவந்து கைவிட்டு விட்டீர்களே…? என ஒவ்வொருவரையும் உலுக்கியெடுக்கும் பாலச்சந்திரனின் பார்வையை உயிர்குடிக்கும் வெறியோடு காத்திருக்கும் பார்வையாக மாற்றிய இவர்களுக்கு நாம் சொல்வதைப் போன்ற நோக்கம் இல்லாமல் வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

மேடைக்கு மேடை நரம்புகள் புடைக்க பேசுவதோடு இனமானக் கடமையினை மூட்டை கட்டிவைத்து விட்டு பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாமல் இருக்கும் தமிழினக் காவலர்களே(?) நீங்கள் இருக்கும் தமிழ் நாட்டில்தான் ராசபக்சே கடைவிரித்து பிரச்சாரம் செய்கின்றான். என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள்….?

முள்ளிவாய்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிவிட்டீர்களா…? புகழேந்தி அண்ணனின் குரலாக கேட்கின்றோம் இப்போது பேசாமல் எப்போது பேசப்போகின்றீர்கள்….?

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் வார்த்தை கொண்டு கேட்கின்றோம் இன்னும் எத்தனை காலத்திற்குதான் உங்கள் கள்ள மௌனத்தை தொடரப் போகின்றீர்கள்…?

தமிழகத்தில் உள்ள ஏழு கோடி தமிழர்களின் கள்ள மௌனம்தான் ஒன்டரை இலட்சம் தமிழர்களை உலகின் துணைகொண்டு சிங்களன் கொன்று புதைக்க வடிகாலாக இருந்தது என்பது மட்டுமல்ல இன்றும் தொடர்கதையாகிவருவதற்கும் காரணமாகும்.

உங்கள் வீதிகளிற்கே வந்து இனத்துரோக கருத்துக்களைச் சுமந்து வரும் திரைப்படங்களை வெளியிட்டு காட்டுவது உங்களால் என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்போடுதான். அதற்கு காரணம் நீங்கள் உங்கள் கள்ள மௌனத்தை கலைக்க இன்னும் தயாராக இல்லை என்பதால்தான்.

கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளராக இனப்படுகொலையாளி ராசப்சேவின் இரத்தவாடை சுமந்த லைக்கா மெபைல் நிறுவனம் கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது சாதாரணமாக விட்டுவிட முடியது.

விஜயின் திரைப்படத்தை தயாரித்துள்ள லைக்கா மொபைல் நிறுவனத்தின் அடுத்த படைப்புகள் நிச்சயம் ராசபக்சே கும்பலின் இரத்த வாடை வீசும் திரைப்படங்களாகவே நிச்சயம் இருக்கும்.

இப்போதே தயவுதாட்சன்யம் இன்றி லைக்கா மொபைல் நிறுவனத்திற்கு சரியான பாடம் புகட்டத் தவறுவீர்களேயானால் தமிழ்த் திரைப்படத்துறையில் மகிந்த கும்பலின் உள்நுழைவினை எப்படி தமிழினப் படுகொலையினை தடுக்க முடியாதவர்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களோ அவ்வாறு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

சொந்த இனத்தை காப்பாற்ற முடியாமல் வேடிக்கை பார்த்த நீங்கள் உங்கள் கள்ள மௌனத்தை இப்போதாவது கலைப்பீர்களா…? நம்பிக்கையுடன் காத்திருக்கின்றது உலகத் தமிழினம்.dcp2778278282 (5) dcp2778278282 (3) dcp2778278282 (4) dcp2778278282 (2) dcp2778278282 (1)

ஈழதேசம் இணையத்தள அரசியல் ஆய்வாளர் :- ம.செந்தமிழ். (26-07-2014)

Top