முதலாவது பதவிக்காலத்துடனேயே விடை பெறுகிரார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஹுஸைன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ளார்.

இன்னுமொரு பதவிக்கால நீடிப்பைக் கோராமலேயே, அவர் விலகவுள்ளாரென அறிவிக்கப்படுகிறது.

ஜோர்டானைச் சேர்ந்த இளவரசரும் முன்னாள் இராஜதந்திரியுமான ஹுஸைன், 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் 1ஆம் திகதி, தனது பதவியை ஏற்றிருந்தார்.

ஒரு பதவிக்காலம், 4 ஆண்டுகளைக் கொண்டது என்பதோடு, இரண்டு தடவைகள் பதவி வகிக்க முடியும்.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட, அரச தலைவர்கள் பலருடனும் முரண்பட்டுக் கொண்ட ஹுஸைன், பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இரண்டாவது தடவையாகப் பதவி வகிப்பதற்கெதிரான முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

தனது முடிவை, தனது அலுவலக அதிகாரிகளுக்கு, மின்னஞ்சல் மூலமாக அவர் அனுப்பிவைத்துள்ளார்.

அந்த மின்னஞ்சலில் அவர், “விடயங்களைப் பற்றிச் சிந்தித்த பின்னர், இரண்டாவது நான்கு ஆண்டுகாலப் பகுதியைக் கோருவதற்கு எதிராக நான் முடிவெடுத்துள்ளேன். தற்போதுள்ள பூகோள அரசியல் நிலைமையில், அவ்வாறு இரண்டாவது தடவையாகப் பதவிக்குக் கோருவது, இரந்து கேட்பதாகவும், முன்னேற்றத்துக்கான கருத்துகளை மட்டுப்படுத்துவதாகவும், எனது குரலின் சுயாதீனத்தையும் நற்பெயரையும் குறைப்பதாகவும் அமையும். எனது குரலென்பது, உங்கள் குரலாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது தடவையாக அவர் பதவிக்குக் கோரினாலும், ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்ட ஐந்து நாடுகளும், ஹுஸைனுக்கான ஆதரவை வழங்குமா என்பது, சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. இந்த 5 நாடுகளுக்கு எதிராகவும், கடுமையான விமர்சனங்களை, ஹுஸைன் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்