அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தது இலங்கை!

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை மீளப் பெற வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கையும் ஆதரவாக வாக்களித்துள்ளது. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்பதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு உலக நாடுகள் பலவும் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. இலங்கையும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கின் அமைதிக்கு ஆபத்தாக அமையும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதன் போது, 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.

முன்னதாக இந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.எனினும் அவரின் மிரட்டல்களுக்கு ஏனைய நாடுகள் அச்சம் கொள்ளாமல் ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவு தோல்வியில் முடிந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்