பதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி!

எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், முதல் மூன்று நாட்களுக்கான அமர்வுகளில் மாத்திரமே தாம் கலந்துகொள்ளவுள்ளதாக ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் தனது பதவிக்காலம் நிறைவடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக செயற்படும் ரவிநாத ஆரியசிங்கவின் பதவிக்காலம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிறைவடைவதாகவும் தம்மை கொழும்பிற்கு வருமாறு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் இலங்கைக்கான ஜெனிவாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக அவர் கூறினார்.

அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் ரவிநாத ஆரியசிங்க குறிப்பிட்டார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான 30/1 பிரேரணையை நடைமுறைப்படுத்த இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமர்வின் போது வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறு கால அவகாசம் வழங்கி எதிர்வரும் மார்ச் மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்