விடுதலைப்புலிகள் பற்றிப் பேசுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அருகதையுண்டு? இனமானன்

இந்த மாதம் கனடா வந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இங்குள்ள கூட்டமைப்புக் கிளையின் கூட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பாக வாதப் பிரதிவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இப்போது பல மட்டங்களில் வீச்சுப் பெற்று வருகிறது.

2013ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலுக்கும், 2915ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தமிழரசுக் கட்சியின் கனடாக் கிளையினர் சேர்த்து வழங்கிய நிதியுதவிக்கு நன்றி தெரிவித்ததுடன் இவரது உரை ஆரம்பமாகியது.

தங்கள் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களுக்கு கனடியத் தமிழர்கள் வழங்கிய ஆதரவையும் நெஞ்சிருத்தி மறவாது இக்கூட்டத்தில் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதன் வழியாக, கனடாவில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான பலம் பொருந்திய மக்களணி இருக்கிறது என்பதை சுமந்திரன் புரிந்து கொண்டதையும் அறியமுடிந்தது.

2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியினருக்கு நிதி சேகரிக்க மாகாணசபை உறுப்பினர்களைக் கனடா செல்லுமாறு தாங்கள் கேட்டபோது, இது உங்கள் தேர்தல் என்பதால் நீங்களே சென்று சேகரியுங்கள் என்று அவர்கள் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது, உட்கட்சிக்குள் இவர்களுக்குள் இருக்கும் விரிசலை வெளிக்காட்டியது.

அடுத்த மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்;ராட்சித் தேர்தல், அண்மையில் வெளியான அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை எனும் இரண்டையும் மையப்படுத்தியதாக தன் உரையை சுமந்திரன் நிகழ்த்தினார்.

ஒரு சட்டத்தரணி என்ற வகையில் சொல்ல வேண்டியவைகளை, அவை யதார்த்தத்துக்குப் புறம்பாக இருந்தபோதிலும் – நம்பும் வகையில் சோடனைசெய்து பேசும் ஆற்றல் இவரிடம் இருப்பதை நன்கறிய முடிந்தது.

உண்மை வீட்டின் வாசலை விட்டுப் புறப்படும் முன்னர், பொய் உலகம் சுற்றி வந்துவிடும் என்பதுபோல, ஒரு பொய்யை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் பொய்களைக் கூறவேண்டிய நிலைக்கு சுமந்திரன் ஆளானார் என்பதை அவரது உரை அம்மணமாகக் காட்டியது.

தமிழரசுக் கட்சி உருவான காலம், சம~;டிக் கோரிக்கையை முன்வைத்த நேரம், தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி தனிநாட்டுக் கோரிக்கையை நிலைநிறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானக் காலம், தமிழ் இளையோர் ஆயுதமேந்தி மண்ணையும் மக்களையும் காப்பாற்றிய போர்க்காலம், முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் காலம் உட்பட தமிழரின் வரலாற்று ரீதியான எந்தவேளையிலும் சுமந்திரன் என்ற பெயரை எவரும் கேள்விப்பட்டதில்லை.

தமிழ் மக்களின் சாத்வீக – ஆயுதப் போராட்ட காலங்களில் இந்தச் சுமந்திரன் எங்கிருந்தார், என்ன செய்தார் என்பது எவருக்குமே தெரியாது.

முள்ளிவாய்க்காலில் தமிழரின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபின்னர் திடீரென தமிழரசுக்குள் நுழைந்து, கூட்டமைப்பின் பின்கதவால் புகுந்து, நியமன எம்.பியாகிய இவர், இப்போது தாமே தமிழரின் தன்னிகரில்லாத் தலைவராகவும், பேச்சாளராகவும், எல்லாமாகவும் காட்சி தருவதும், தமக்கே எல்லாம் தெரிந்ததுபோல காட்டிக்கொள்வதும் தமிழினத்தின் சாபக்கேடு.

இதற்கு உதாரணமாக இவரது கனடிய உரையின் சில பகுதிகளை மட்டும் பார்ப்போம்.

அண்மையில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமார் விடுத்த சவாலால் இவர் மனம் வாடியிருப்பது தெரிகிறது.

விடுதலைப் புலிகளிடமோ அல்லது வேறு எவரிடமோ கேள்வி கேட்காதவர்கள் தம்மிடம் மட்டும் எதற்காகக் கேள்வி கேட்க வேண்டுமென இவர் கேட்டுள்ளார்.

இதற்குக் காரணம் என்ன தெரியுமா? அரசியலமைப்பு வழிகாட்டுக் குழுவில் தாம் மட்டுமே பல முன்மொழிவுகளைக் கொண்டு வந்ததாகவும் இடைக்கால அறிக்கையில் தமிழர் தீர்வுக்கான எல்லாம் இருப்பதாகவும் தாம் பிதற்றி வருவதை ஒருமுறை சுமந்திரன் நினைப்பின், இக்கேள்வி ஏன் வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கூட்டமைப்பின் சம்பந்தனோ அல்லது அதன் மற்றைய எம்.பிக்களோ இடைக்கால அறிக்கை பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் வாய் திறக்க மறுத்திருக்கும் நிலையில், மிகப்பிரசங்கித்தனமாக தமிழ் மக்களை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்ற முனைந்தால் சவால்களுக்கும் கேள்விகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும்தானே.

ஆங்கிலத்தில் ருnவையசல என்றால் ஒற்றையாட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இதே ஒற்றையாட்சிதான் தமிழருக்கான சம உரிமைகளைப் பறித்து இரண்டாம்தரப் பிரஜைகளாக்கியது.

இந்த ஒற்றையாட்சியை ஷஏக்கிய ராஜ்ய| என்று சிங்களம் சொல்கிறது. இதற்கு சுமந்திரன் வழங்கும் வியாக்கியானம் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத, ஒருமித்த ஆட்சி என்பது.

சிங்களத் தலைவர்களான மைத்திரி, ரணில், மகிந்த ஆகியோரில் ஒருவர்கூட இதுவரை வழங்காத வியாக்கியானத்தை சிங்களவர் அல்லாத சுமந்திரன் தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏன் உருவானது?

சிங்களத் தலைவர்களுக்குப் புரியாத சிங்களம் இவருக்குப் புரிகிறதா?

ஒற்றையாட்சியின் தமிழ்ப் பதம் ஒருமித்தநாடு என்றால், இலங்கை சிங்கள நாடு என்பதும், பௌத்த நாடு என்பதும் மீள உறுதியளிக்கப்படுகிறது.

சந்திரிகாவுக்கு ஒரு கதிர்காமர்
மைத்திரி-ரணிலுக்கு ஒரு சுமந்திரன்!

இங்குதான் பிரச்சனையே எழுகிறது.

ஒற்றையாட்சியின் கருத்து இப்போது மாறியுள்ளதாகவும், பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் பிரிந்து போவதற்கு இடமிருப்பதால், இலங்கையிலும் அதற்கு இடமுண்டு என்பது சுமந்திரனின் கற்பனையுலகச் சொப்பனம்.

எந்தவேளையிலும் நாடு பிளவுபட அனுமதிக்கப்பட மாட்டாது என்று நாளாந்தம் கூறிவரும் மைத்திரியும் ரணிலும், வடக்கு கிழக்கு இணைப்புக்கோ, சம~;டிக்கோ இடம் கிடையாது என்று அழுத்திச் சொல்லி வருகின்றனர்.

உண்மைநிலை இப்படியிருக்க, விரும்பினால் இரண்டு மாகாணங்கள் இணைய இடமுண்டு என்பதும், புதிய அரசியலமைப்பு விதிகளை திருத்தவோ மாற்றவோ மீளப்பெறவோ முடியாதெனவும் சுமந்திரன் சொல்வது அப்பட்டமான ஏமாற்று.

ஒரு தமிழராக இருந்து கொண்டு, தமிழினத்துக்குக் காது குத்த சுமந்திரன் முனையக்கூடாது. சட்டம், அரசியலமைப்பு என்பவை காலத்துக்குக் காலம் மாற்றத்துக்குட்படுபவை. இலங்கையில் 1972, மற்றும் 1978ம் ஆண்டுகளில் புதிய அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டதுபோல, இன்னும் பல தடவைகள் இவைகள் புதிதாக எழுதப்படும் சாத்தியங்கள் உண்டு.

இதைப் புரிந்து கொண்ட சுமந்திரன் இடைக்கால அறிக்கையை ஒரு பைபிளாக அல்லது குறி சொல்லும் சோதிடப் புத்தகமாகக் கருதுவது, தமிழருக்கு விமோசனத்தை வழங்காது.

விடுதலைப் புலிகளின் நோர்வே பேச்சுவார்த்தை பற்றியும், ஒஸ்லோ கோட்பாடு பற்றியும் விளங்கியும் விளங்காதவராக அல்லது எதுவுமே விளங்காதவராகச் சுமந்திரன் கருத்துக் கூறுவது முட்டாள்தனமானது.

விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் தீர்வுபெற சம்மதப்பட்டே இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுமந்திரன் கூறுவது அவரது அறியாமையின் வெளிப்பாடு.

தனிநாட்டை எவ்வாறு பிரித்தெடுப்பது, எங்கே எல்லைக்கோடு வரைவது என்று விடுதலைப் புலிகள் ஒருபோதும் பேசவில்லையென்பது இவரது குதர்க்கமான கருத்து.

ஒரு நாட்டுக்குள் எப்படித் தீர்வைப்பெற முடியதுமென்பது பற்றி ஆராயலாம் என்பதே ஒஸ்லோ கோட்பாடு.

இதனை ஒருபோதும் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனாலேயே ஒஸ்லோ கோட்பாடு செயற்பாடற்றுப் போனது.

தனிநாட்டுக் கோரிக்கைக்கு கடந்த தேர்தல்களில் தமிழர் தமக்கு ஆணை தரவில்லையென்றும், ஒற்றையாட்சிக்குள் சம~;டிக்கே ஆணை தந்ததாகவும் சுமந்திரன் கூறுவது, அவரால் திட்டமிட்டு அவிழ்த்து விடப்படும் பொய்யுரை.

கூட்டமைப்பை வன்னித் தலைமை உருவாக்கியபோது எங்கிருந்தார் என்று தெரியாத இவர், தமிழ் மக்களின் விடுதலை வரலற்றை திசைதிருப்ப முனைவது சிங்களத்துக்கு வீசும் சாமரை.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தனிநாட்டுக் கோரிக்கை என்பதுவும், 1977ம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டுக் கோரிக்கைக்கே மக்கள் வாக்களித்து தமிழர்களை அதிகாரத்துடன் நாடாளுமன்றம் அனுப்பினார்கள் என்பதையும் அவ்வேளையில் அரசியல் அரிச்சுவடிகூடத் தெரியாதிருந்த சுமந்திரனுக்கு இப்போது எல்லாமே முரணாகத் தெரிகிறது.

கூட்டமைப்பு உருவான காலத்தில் அதே தனிநாட்டுக் கோரிக்கைதான் அதன் அடிப்படை அம்சமாக இருந்தது.

2009ன் பின்னர் சுமந்திரன் நுழைந்த கூட்டமைப்பு அதனைக் கைவிட்டிருந்தது என்பதை அறிந்திராத தமிழ் மக்கள், வன்னித்தலைமை நீட்டிய விரலை மதித்து கூட்டமைப்புக்குத் தொடர்ந்து அளித்த வாக்குகளை சுமந்திரன் புரட்டிப் போடுவது தமிழினத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகம்.

21ம் திகதிய கனடிய உரையில் இவர் குறிப்பிட்ட இன்னொரு விடயத்தை அவரது மொழியிலேயே படிப்பது பொருத்தமானது: “புதிய அரசமைப்பில் தமிழருக்குத் தீர்வு வருமா வராதா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்பது இவரது கோரிக்கை.

இதற்கு இவர் கூறும் இன்னொரு காரணம், மிக நகையானது. “முன்னைய ஆட்சிக் காலங்களில் சிங்களக் கட்சியொன்று தமிழருக்கு ஏதாவது தர முன்வந்தால் எதிர்க்கட்சி அதனை குழப்பும். இப்போது அந்த இரண்டு சிங்களக் கட்சிகளும் இணைந்து ஆட்சி புரிவது தமிழருக்குச் சாதகமானது என்பது சுமந்திரனின் கணிப்பு.

இதனை வேறுவிதமாகவும் பார்க்கலாம்: முன்னர் இரு சிங்களக் கட்சிகளும் தனித்தனியாக தமிழரை எதிர்த்து அவர்கள் உரிமைகளைப் பறித்தார்கள். இப்போது அவ்விருவரும் ஒன்றிணைந்து தமக்கு எதிர்தரப்பு இல்லாத ஒரு நிலையில், தமிழரை எத்திப் பிழைக்க முயற்சிக்கிறார்கள்.

இதற்கு கூட்டமைப்பு துணைபோவதும், சுமந்திரன் இதற்கான முதன்மைத் தரகராக இயங்குவதும் அப்பட்டமாகத் தெரிகிறது.

அன்று சந்திரிகாவுக்கு ஒரு கதிர்காமர் கிடைத்ததுபோல, இன்று மைத்திரிக்கும் ரணிலுக்கும் ஒரு சுமந்திரன் கிடைத்துள்ளார் என்பது, பலரும் காதோடு காதாக பகிர்ந்து கொள்ளும் கருத்து.

About இலக்கியன்

மறுமொழி இடவும்