வடக்கு – கிழக்கு தொடர்பிலான தீர்ப்பு சிலரின் கபட நாடகத்தால் நிகழ்ந்தது என்கிறார் சம்பந்தன்!

1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்த சாசனத்தின் மூலம், வட கிழக்கு இணைப்பு இருந்து வந்த நிலையில், 18 வருடத்திற்குப் பின்னர் சிலரின் கபட நாடக நடவடிக்கை மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருந்தது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நற்பட்டிமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு முழுமையாக தமிழ்மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். இதன் பயனாக நாட்டில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம அந்தஸ்தை வழங்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்பதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

முன்னைய ஜனாதிபதியின்ஆட்சிக் காலத்தில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன அது பயனளிக்கவில்லை. அதன் பின் ஆட்சி மாற்றத்தினை தமிழ்மக்கள் ஏற்படுத்துவதற்கு முழுமையாக பங்களிப்பு வழங்கினர்.

அரசியல் தீர்வு விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணிசமான தூரம் பயணித்துள்ளது .இன்னும் ஒரு முடிவும் கிடைக்கப்பெறவில்லை அதனைப் பெறுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 13 ஆவது அரசியல் சாசனத்தின் பிரகாரம் மாகாண சபைக்கான அதிகாரப் பகீர்வு அரசியல் சாசனத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட போதிலும் கூட அது முழுமையான தீர்வாக அமையவில்லை.அது நிலையான உறுதியான நிரந்தரமான அதிகாரப் பகிர்வாக அமையாதமையால் அன்று நாம் போட்டியிடவில்லை ஏன் என்றால் முழுமையான தீர்வு எட்டப்படவேண்டும் என்பதற்காகப் போராடி வந்தோம்.

30 வருடகால ஆயுதப்போராட்டத்தின் பிற்பாடு தமிழ்மக்கள் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணையின் பயனாலேயே இன்று தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேசம் வரை தமிழ்க் கூட்டமைப்பு முன்னெடுப்பதற்கு உதவியாக இருக்கின்றது

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத்தின் படி உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படும். அதுமட்டுமல்ல மத்திய அரசாங்கமோ மாகாண அரசாங்கமோ பல்வேறு சட்டங்களை உருவாக்கின்றபோது அதிகமான சட்டங்களை அமுல்படுத்துகின்ற அதிகாரம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற விடயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்