கூட்டமைப்பு ஆதரவுடன் பறிபோகின்றது எல்லைக்கிராமங்கள்!

உள்ளூராட்சி தேர்தல் 2018க்கான பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது. அந்த சூடுபிடித்தலுக்கான பேசுபொருளாக அபிவிருத்தி அபிவிருத்தியுடன் கூடிய தேசிய அரசியல் என்ற இரு விடயங்களும் மாறியிருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் தமிழர் தரப்பில் கவனியாது விட்ட இன்னொரு விடயமும் உண்டு.
இதுவரை காலமும் தமிழர்கள் வசமிருந்த பிரதேச சபைகளுக்குள் பெரும்பான்மையினர் நுழைந்திருப்பதும், பிரதேச சபையே அவர்களின் வாக்குப் பல அதிகரிப்பின் காரணமாக, பெரும்பான்மைவயப்படவிருக்கும் சம்பவங்களும் நடக்கவிருக்கின்றன. அவ்வாறானதொரு தமிழ் பிரதேச சபை அபகரிப்பைப் பற்றியே இக்கட்டுரை பேசுகின்றது.

வவுனியா வடக்கு பிரதேச சபை ஈழப் போரின் மிக மோசமான அழிவுகளையும், ஆக்கிரமிப்புக்களையும் சந்தித்த அனேக கிராமங்கள் இந்தப் பிரதேச சபைக்குள் வருகின்றன. பட்டிக்குடியிப்பு, ஊஞ்சால்கட்டி, மருதோடை, ஒலுமடு, மாமடு என நீளும் அக்கிராமங்களின் பட்டியல். நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழர்கள் இங்கு வாழ்ந்திருப்பினும், பெரும்பான்மையினர் பதவியா, வெலியோயா போன்ற எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட பின்னர், அங்கு வாழ முடியாத சூழல் உருவாகியது. 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகரித்த வன்முறைகள், களவு, கொள்ளை போன்றன தமிழர்களை அனேக எல்லைக் கிராமங்களில் இருந்து வெளியேற்றிவிட்டது. பின்னர் நடந்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும், ஒதியமலை படுகொலை போன்ற சம்பவங்களின் காரணமாகவும் மக்கள் எல்லைக் கிராமங்களை விட்டு முற்றாகவே வெளியேறியிருந்தனர்.
இவ்வாறு தமிழ் மக்கள் வெளியேறிய கிராமங்கள், விரைவாகவே பெரும்பான்மையினர் வசமாகின. திட்டமிட்டவகையில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர். தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களுக்கு மாற்றம்செய்யப்பட்டன. போர் தொடங்கிய காலத்தில் தொடங்கிய இந்த வேலைத்திட்டம், போர் முடிந்த பின்னரும் நீடித்திருக்கிறது.

அவ்வாறு சிங்களமயமாகிய கிராமங்கள்தான் இம்முறை வவுனியா வடககு பிரதேச சபையையும் பெரும்பான்மைவயப்படுத்திவிடும் சூழலை ஏற்படுத்தியுள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குரிய 14 வட்டாரங்களில், 5 வட்டாரங்கள் முழுமையாக சிங்கள வாக்காளர்களைக் கொண்டிருக்கின்றன. கஜபாபுர – மொறவௌ (710 வாக்காளர்கள்), கல்யாணபுர (431 வாக்காளர்கள்), ஏத்தாவெட்டுனுவௌ (914 வாக்காளர்கள்) , சம்பத்நுவர (1278 வாக்காளர்கள்) போன்ற வட்டாரங்கள் முழுமையாக சிங்கள வாக்காளரகளைக் கொண்டுள்ளன.

ஊஞ்சால் கட்டி – மருதோடை (944 வாக்காளர்) என்கிற இப்போதும் தமிழர்கள் வாழ்ந்து வரும் எல்லைக்கிராமம் புதிய வட்டாரமாக இணைக்கப்பட்டு, இதற்குள்ளும் பெரும்பான்மையினர் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் புதிய வட்டாரத்தில் ஊஞ்சால்கட்டி (119 தமிழ் வாக்களார்கள்), மருதோடை (193 தமிழ் வாக்களார்கள்), கொக்கச்சாண்குளம் (632 சிங்கள வாக்காளர்கள்) ஆகிய 3தமிழ் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டாரத்தில் மொத்தமுள்ள 944 வாக்காளர்களில் 312 தமிழ் வாக்காளர்களும், 632 சிங்கள வாக்களர்களும் உள்ளமை கவனிக்கத்தக்கது.

எனவே வவுனியா வடக்கு பிரதேச சபைக்குரிய 5 வட்டாரங்களிலும் மொத்தமாக 3965 சிங்கள வாக்காளர்கள் உள்ளனர். ஏனைய 9 தமிழ் வட்டாரங்களிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7400. சிங்களவர்களின் 3965 வாக்குகளையும் பெற பிரதானமாக 3 கட்சிகளே போட்டியிடுகின்றன.

அத்தோடு சிங்கள மக்கள் தம் மத்தியில் செல்வாக்குமிக்க பெரும்பான்மை கட்சிகளைத் தவிர்த்து பிறருக்கு வாக்களிப்பதை செய்யார். தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதிலும் பின்நிற்கார். இதனை விளங்கிக் கொண்டே புதிதாக குடியேற்றப்பட்டுள்ள சிங்கள வாக்காளர்களைத் தம்வசம் இழுக்கும் நோக்குடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள வேட்பாளர்களை வவுனியா வடக்கிற்கு களமிறக்கியது. சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டது.

ஆனால் மறுபுறத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊஞ்சால் கட்டி – மருதோடை வட்டாரத்தி்ல் அண்மையிலேயே சிங்களவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். இப்போதும் தமிழ் பெயருடன் அழைக்கப்பட்டு வரும் தமிழர்களின் இக்கிராமங்களுக்கு கலாபோகஸ்வௌ என்று சிங்களத்தில் பெயரும் மாற்றப்பட்டது.

அவர்களுக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில், வவுனியாவில் நடைபெற்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் முதலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமி்ழர் வசமுள்ள ஏனைய 9 தமிழ் வட்டாரங்களினதும் மொத்த வாக்களார்களின் எண்ணிக்கை 7400. அந்த 7400 வாக்குகளையும் பெறுவதற்காக 9 கட்சிகள் களத்தில் நிற்கின்றன. தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய தேர்தல் அரசியலில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பமும், சலிப்பும், வாக்களிப்பு வீதத்தைப் பாதிக்கும் என்றே பலரும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலை வவுனியா வடக்கிலும் பாதிப்பை செலுத்துமானால் வாக்களிப்போர் எண்ணிக்கையில் மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அவ்வாறானதொரு வாக்களிப்பின் வீழ்ச்சியும், வாக்கு சிதறடிப்பும் பெரும்பான்மையினரின் பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

இதற்கிடையில், வவுனியா வடக்கு பிரதேச சபையின் சில தமிழ் வட்டாரங்களில்கூட மைத்திரி அணிக்கு செல்வாக்குண்டு எனச் சொல்லப்படுகிறது. அந்த வாக்குகளும் தேசிய கட்சிகளின் பக்கம் செல்லுமானால், சிங்கள வாக்காளர்களின் பலம் அதிகரிக்கும். தமிழர் தாயகப் பகுதியின் தொடக்கவிடமான வவுனியா வடக்கு பிரதேச சபையை இழந்தால், நிர்வாக அலகு ரீதியில் தனி புதியதொரு அரசியல் அடையாளம் அப்பகுதிக்கு கிடைக்கும்.

வவுனியா மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்கள் எப்படி சிங்களமயப்பட்டதோ அதேபோன்றே வவுனியா வடககும் மாற்றப்பட்டுவிடும். அதுவும் ஜனநாயக முறைப்படி தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தை பெரும்பான்மையினர் அபகரித்துக்கொள்ள வழியேற்படுத்திக்கொடுத்ததாக அமையும்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்