மஹிந்தவின் சதுரங்க ஆட்டம் ஆரம்பம்! – கைகோர்க்கும் மைத்திரி?

எதிராக கட்சி ஆரம்பிப்பவர்களின் இரகசியங்களை அம்பலப்படுத்தி வீதியில் அலைய விடுவேன் என 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மேடையில் பகிரங்கமாக எச்சரிக்கையினை விடுத்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி தரப்பினரை குறிவைத்தே அவர் இவ்வாறானதோர் எச்சரிக்கையினை விடுத்திருந்தார் என்பது கடந்தகால அரசியல் நிலைப்பாட்டினை ஆராயும் போது தெளிவடையும்.

எனினும் தற்போது வரையிலும் மைத்திரி எந்தவொரு இரகசியத்தினையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் அவருக்கு எதிராக பொதுஜன பெரமுன சாதாரணமாக எழுந்து தற்போது விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. இதன் காரணமாக இதுவரையில் நடைபெற்று வந்தது அரசியல் நாடகமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தற்போது வெளிவந்துள்ள முடிவுகளின்படி மஹிந்த ஆதரவு தரப்பின் பொதுஜன பெரமுன ஏராளமான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது. எனினும் இறுதி கட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனாலும் பொதுஜன பெரமுனவின் மக்கள் ஆதரவு நிரூபிக்கப்பட்டு விட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க பொதுஜன பெரமுன ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதாக அக்கட்சியின் ஆதரவாளர்களும் முக்கியஸ்தர்களும் கருத்துகளை வெளியிட்டு வருவதோடு, வெற்றிக் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் மஹிந்தவின் தலைமையை இன்றும் மக்கள் விரும்புகின்றார்கள் என்ற எண்ணப்பாடு இயல்பாகவே உருவாகும். என்றாலும் ஊழல் அற்ற ஆட்சியினை அமைப்போம் என்று 2015ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த நல்லாட்சி இது வரையிலும் ஊழல் தொடர்பாக எந்தவொரு காத்திரமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பதே வெளிப்படை.

அதேபோன்று மஹிந்தவின் தலைமையை பொதுமக்கள் விரும்புகின்றார்களா என்பதனையும் தாண்டி, நல்லாட்சி மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியே தற்போது வெளிப்பட்டுள்ளது எனலாம்.

நல்லாட்சி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றாமல் செயற்பட்டு வந்ததே தற்போது மக்களுக்கு ஆட்சிமீது வெறுப்பும், எதிர்பக்கம் அதாவது மஹிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த விடயத்தில் மஹிந்த தரப்பிற்கு ஆதரவு அதிகரிக்க முக்கிய காரணம் அவர் மீது மக்கள் கொண்டிருந்த மதிப்பினையும் தாண்டி மக்களின் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு என்றே கூறப்படுகின்றது.

மக்கள் நல்லாட்சி அரசின் மீது கொண்டிருந்த நம்பிக்கை குறைவடைந்தமையினால், அதற்கான மாற்றுத்தலைமை மஹிந்த அணியிடம் மட்டுமே உள்ளது காரணம் சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்த ஆட்சியாகவே நல்லாட்சி அமைந்துள்ளது.

ஏற்கனவே மாற்றத்தினை எதிர்பார்த்த மக்கள் நல்லாட்சியைத் தேர்வு செய்தனர், தற்போதும் அதேபோன்ற மனநிலை ஏற்பட மக்கள் மஹிந்த தரப்பிற்கே வாக்களிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றே கூறப்பட வேண்டும்.

எவ்வாயினும் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மூலம் மஹிந்த தனது மக்கள் செல்வாக்கினை வெளிக்காட்டியுள்ளார் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று என்றே அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயிலும் பொதுஜன பெரமுன கட்சிக்கு மஹிந்தவை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அவர் இன்றும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவே இருக்கின்றார் அக்கட்சியில் இருந்து அவர் நீக்கப்படவில்லை என்பதே உண்மை.

மேலும் தற்போது மஹிந்த ராஜபக்ஷ சுதந்திர கட்சியின் தலைமைப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என முக்கியஸ்தர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி எதிர்வரும் காலங்களில் ஏற்கனவே கூறப்பட்டதனைப்போல் மைத்திரி, மஹிந்த அணிகள் மீண்டும் இணைந்துகொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

காரணம் பொதுஜன பெரமுன கட்சியில் இணையாமலேயே மஹிந்த அந்தக்கட்சியினை பலம் வாய்ந்ததாக உருவாக்கியுள்ளார். அடுத்து அவர் சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வாராயின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு மைத்திரிக்கு அவசியமற்றதான அரசியல் நிலை உருவாகக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. இதன் காரணமாகவே இதுவரையிலும் ஐக்கியதேசிய கட்சிக்கும், சுதந்திர கட்சிக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

நிலைமை இவ்வாறு இருக்க அடுத்த பிரதமராக மஹிந்தவை முன்னிருந்த ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுவதோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்கும் கோரிக்கைகளும் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மஹிந்த, பொதுஜன பெரமுன, மைத்திரி, சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் அரசியல் நகர்வுகளை அவதானிக்கும் போது திட்டமிடப்பட்ட வகையில் சுதந்திரக்கட்சி தனித்து அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கே காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருகின்றது என்பது தற்போது அம்பலமாகி வருவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்