ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தை மீண்டும் காப்பாற்றப்போகிறதோ தமிழரசுக்கட்சி? ஈபிஆர்எல்எவ் சந்தேகம்

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

உள்;ராட்சி தேர்தலில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள். இடைக்கால அறிக்கைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இதனையே தெரிவித்திருந்தது. தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இடைக்கால அறிக்கையை ஏற்க மறுத்திருந்தன. இதனடிப்படையிலேயே மக்களின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

உள்;ராட்சி மன்றங்களுக்காக நாடு முழுவதும் கடந்த 10.02.2018 சனியன்று நடைபெற்ற தேர்தல் ஒட்டுமொத்த இலங்கையின் அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது. ஊழலை மையப்படுத்தி ஜனாதிபதி சுழற்றிய வாள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டையும் பதம் பார்த்துள்ளதுடன் புதிதாக உதயமான சிறிலங்கா பொதுஜன பெரமுன என்னும் முன்னாள் ஜனாதிபதியின் தலைமையிலான கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தந்துள்ளது.

மறுபுறத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் தேசிய இனத்தின் அரசியல் பரப்பில் பொதுவான கொள்கையின்கீழ் ஜனநாயக பன்மைத் தன்மையை ஏற்று பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உளப்பூர்வமானதும், சட்ட அங்கீகாரம் மிக்கதுமான ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்படவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.

எமது மக்கள் தமிழரசுக் கட்சியின் ஏகபோக எதேச்சாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளனர். நாம் அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையை ஏற்க முடியாதென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் ஏகபோகத்தை அங்கீகரிக்க முடியாதென்றும் கூறியே தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முடியாதென்று தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சி அமைப்பு, ஜனநாயக தமிழரசுக் கட்சி மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியவற்றை உள்ளடக்கி தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கி அதன் பொதுச்சின்னமாக உதயசூரியனை ஏற்றுக்கொண்டோம்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தோற்றம் பெற்ற இரண்டு மாதங்களுக்குள் வடக்கு-கிழக்கில் தொகுதிவாரியாகவும் விகிதாசார அடிப்படையிலும் எண்பத்தொரு ஆசனங்களை எமது மக்களின் அங்கீகாரத்துடன் பெற்றுள்ளோம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்தான் இன்னமும் இருக்கின்றது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொய்யான பிரச்சாரம், தென்னிலங்கை ஆளும் கட்சியினர் வாறியிரைத்த பணம், பொய்யான பரப்புரைகள், அதிகாரபலம் என்பவற்றையும் தாண்டி எமது மக்கள் கொள்கைக்காக வாக்களித்துள்ளனர். அவர்களின் பற்றுறுதிக்கு நாம் தலைவணங்குகிறோம். உங்களின் ஆதரவினால்தான் தமிழரசுக் கட்சியினரின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த முடிந்துள்ளது. மக்களே எமது எஜமானர்கள் என்று நாம் அடிக்கடி கூறிவரும் வாக்கு எவ்வளவு உண்மையானது என்பதை இன்று சகலரும் உணர்ந்திருப்பார்கள்.

தற்போது தென்னிலங்கையில் நிலவும் குழப்பகரமான சூழலில் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் நிகழவுள்ளது. இந்நிலையில் தமிழரசுக் கட்சி சில முக்கியமான பதவிகளைப் பெற்றுக்கொள்ளப்போவதாகவும் வதந்திகள் உலவுகின்றன. இதற்காக மீண்டும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தை பிணையெடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேசமும் எழுந்துள்ளது. இந்நிலையில், நேரடியாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளாத போதிலும் நிழலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கான முயற்சிகளையும் தமிழரசுக் கட்சி மேற்கொள்வதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இந்நிலையில் அரசாங்கக் கட்சிகளுடன் இணைந்து உள்;ராட்சி சபைகளைப் பொறுப்பேற்றால் அது அவர்களது எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தமது வெற்றி வாய்ப்பை பாதித்துவிடும் என்று அஞ்சியே தமிழரசுக் கட்சி இன்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புடனும், தமிழ் தேசிய பேரவையுடனும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகப் பகிரங்க அழைப்புக்களை விடுக்கின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. இதுவரை செய்யாத அபிவிருத்தியையா இனி இவர்கள் செய்யப்போகிறார்கள்? ஆகவே நாம் எமது மக்கள் கொடுத்த ஆணையிலிருந்து விலக விரும்பவில்லை. கிழக்கில் ஒரு தமிழர் முதலமைச்சராக வரவேண்டும் என்ற விருப்பம் தமிழரசுக் கட்சிக்கு உண்மையில் இருக்குமானால் வலுவான கொள்கையின்கீழ் பொதுவான வேலைத்திட்டத்தின்கீழ் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து பயணிப்பதற்கான தனது விருப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்க வேண்டும். அத்தகைய கூட்டமைப்பு சட்டவலுவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கென்று ஒரு பொதுச் சின்னத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கியத்திற்கான எமது கதவுகள் திறந்தே உள்ளது.

உள்;ராட்சி மன்றங்களைப் பொறுத்தவரை சபைகளின் முடிவுகள் சரியாகவும் மக்களின் நலன் சார்ந்தும் இருக்குமானால் அவைகளுக்கு ஆதரவளிப்போம். அதே நேரம் சபைகளின் மக்கள்விரோத செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டுபவர்களாகவும் திகழ்வோம்.

எமது அரசியல் தீர்வு விடயத்தில் எமது மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுப்பின்றி நிறைவேற்றிக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் ஐக்கிய முன்னணி அரசியலையே நாமும் விரும்புகிறோம். எமது மக்களின் விருப்பமும் முடிவும் அதுவே.

இவை ஒருபுறமிருக்க, எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையத்தின் 37ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது. தற்போது மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையைக் காரணம் காட்டி இந்த கூட்டத்திலும் அரசை பிணையெடுக்கும் முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி மேற்கொள்ளப் போகிறதோ என்ற சந்தேகம் பரவலாக மக்கள் மத்தியில் எழுதுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான மக்கள் விரோத செயற்பாடுகளும் கூட்டமைப்பின் பேரால் அந்தக் கட்சியில் உள்ள ஒருசிலரே முடிவுகளை மேற்கொள்வதுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவிற்கான காரணம் என்பதை தமிழரசுக் கட்சி உணர்ந்துகொள்ள வேண்டும். இடைக்கால அறிக்கையில் இணக்கம் தெரிவித்து ஏற்றுக்கொண்டுள்ள விடயங்களுக்கு மாறாக, உள்;ராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்து ஆணை கோரிய போதிலும் தமிழரசுக் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை உணர்ந்தே மக்கள் அதற்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர். இனியாவது தமிழரசுக் கட்சி தன்னை திருத்திக்கொண்டு மக்களின் நலன்சார்ந்து இதய சுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும்.

நாம் எப்போதும் ஐக்கிய முன்னணியூடாக மட்டுமே எமது மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள். எனவே எமது மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்று அவர்களின் கோரிக்கையையே நாமும் முன்வைக்க விரும்புகிறோம். எமது கருத்துக்களுக்கு வலுசேர்த்த எமது உறவுகளுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்து அவர்களின் துணிச்சலுக்கு தலைவணங்குகிறோம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்