உள்ளூராட்சி தேர்தல் பின்னடைவின் எதிரொலியாக விக்னேசுவரனை தக்கவைக்க கூட்டமைப்பு முயற்சி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய காத்திரமான வெளிப்பாட்டினால் எதேச்சதிகாரப் போக்கில் செயல்பட்டு வந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அங்கீகாரமே சிறிலங்கா தேசிய அரசியல் மற்றும் சர்வதேச மட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு அதி முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றது. ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி சிங்கள, சர்வதேச நலன்களை முன்னிறுத்தியதான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

இதன் காரணமாக தமிழ் மக்கள் மாற்றுத் தலைமை ஒன்றை ஏற்று அங்கிகரிக்கும் முயற்சியாக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பயன்படுத்தியுள்ளார்கள். அதன் வெளிப்பாடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவம் தகர்த்தெறியப்பட்டுள்ளது.இந்தப் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் நிலமையின் விபரீதம் குறித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்கள். இதன்போதே வட மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களை தொடர்ந்தும் கூட்டமைப்பின் பக்கமே தக்கவைப்பதென ஆலோசிக்கப் பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

தற்போதுள்ள சூழலில் விக்னேசுவரன் வெளிப்படையாகவே தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்து மாற்று அணியாக வரும் வட மாகாண சபை தேர்தலை எதிர்கொண்டால் நிலமை மேலும் மோசமாகும் என்பதால் விக்னேசுவரன் அவர்களை தமது கூடாரத்தில் தக்கவைக்க தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையிலேயே வரும் வட மாகாண சபை தேரதலிலும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேசுவரன் அவர்களை ஏற்றுக் கொள்வதென்ற உத்தரவாதத்தை தமிழரசுத் தலைமை விக்னேசுவரன் அவர்களிடம் தெரியப்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்