கனகராயன்குளம் காணியை பொலிஸாருக்கு வழங்கும் அரச அதிபரின் முடிவுக்கு எதிர்ப்பு

வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு சொந்தமான காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு நிரந்தரமாக வழங்கும் தீர்மானத்தை மாற்றவேண்டும்.

மக்களுக்குச்சொந்தமான காணி மக்களிடமே மீள வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

8 வருடங்களாக மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு பொலிஸாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்தக் காணியை மக்களிடம் மீள வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. எனினும் இதுவரை அக்காணி மக்களிடம் கையளிக்கப்படவில்லை.

அந்தக் காணி மக்களிடம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் மக்களுடன் இணைந்து போராடுவோம் எனவும் கஜேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக செ.கஜேந்திரன் மேலும் கூறுகையில்,

வவுனியா – கனகராயன் குளம் பகுதியில் கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு சொந்தமான காணி போருக்கு பின்னர் 8 வருடங்களாக பொலிஸாரினால் பயன்படுத்தப்பட்டது. இந்த காணியை பெற்றுத் தருமாறு கோரி மக்கள் பல தடவைகள் போராட்டம் நடத்தினர்.

மக்கள் போராட்டம் நடத்திய சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த காணியை மீள பெற்று கொடுப்பதாக கூறப்பட்டது. எனினும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் புதிதாக பதவியேற்றிருக்கும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அந்த காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு நிரந்தரமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்திற்கு வவுனியா பெரியகுளம் பகுதியில் காணி வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்களுடைய காணிகளையும் அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்.

எனவே மக்களுடைய காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கும் அரச அதிபரின் தீர்மானம் மாற்றப்படவேண்டும். இல்லையேல் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்