இரணுவமயமாக்கல், பிரியங்கவின் கொலை மிரட்டல் தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம்

பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி தமிழ் தகவல் நடுவத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து சந்தித்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 14 – 02 – 2018 அன்று வெவினி (waveny) தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பீற்றர் அல்டஸ் (Peter Aldous) அவர்களை பரஞ்சோதி ரமேஷ்கண்ணா தலமையில் அப்பகுதியில் வாழும் நிசாந்தன், சந்தோஷ் மற்றும் தமிழ் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர் நகுலேஷ்வரன் சிவதீபன் ஆகியோர் சந்தித்தனர்.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.நா வினால் கொண்டு வரப்பட்ட ஆயுத விற்பனை உடன்படிக்கையில்(ATT) பிரித்தானியா கையெழுத்திட்ட பின்னர் கூட இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான மனித உரிமை மீறல்களையும், இனப்படுகொலையையும் நிகழ்த்திய இலங்கைக்கு 2013-2014 காலப்பகுதியில் மட்டும் 61 மில்லியன் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை விற்பனை செய்துள்ளது. இது யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதி என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

பாதுகாப்பு அமைச்சுக்கு இலங்கை அரசு அதிகளவில் நிதியை ஒதுக்குவதனால் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாகவே உள்ளது. இது தொடர்ந்து ஆயுதக் கலாச்சாரத்தை அதிகரிப்பதுடன் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள், கொலைகள், இராணுவத்தினரும், பொலிசாரும் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது. இது நல்லிணக்கம் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கு எப்போதும் தட்டையான ஒரு விடயமாகவே பார்க்க வேண்டி உள்ளது.

குறித்த சந்திப்பின்போது, இலங்கையில் 2016/17 காலப்பகுதியில் இடம்பெற்ற ஆட்கடத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதை முகாம்கள், ஸ்காட்லாந்து 2007 இல் இருந்து இன்று வரை CID, STF மற்றும் TID அமைப்புகளுக்கு வழங்கி வரும் பயிற்சிகளால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள் போன்றவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இவைதவிர அண்மையில் இலங்கையின் சுதந்திர தினத்தை புறக்கணித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கைத் தூதரக அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவினால் தமக்கு விடப்பட்ட கொலை அச்சுறுத்தலையும், அவர் ஒரு போர்க்குற்றவாளி என்பதையும் ஆதாரங்களுடன் எடுத்துக்கூறி அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர பாதுகாப்பை நீக்கி அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இவ்விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பிற பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் குறிப்பாக தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் உறுதியளித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்