எதேச்சதிகாரமாகிய ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான சம்மட்டி அடி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவானது எதேச்சதிகாரமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த சம்மட்டி அடியாகவே அமைந்துள்ளது.

தமிழ் மக்களின் வாக்குப் பலத்தில் கிடைக்கப்பெற்ற தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிதுவம் எனும் அதி உயர் நிலையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செயற்பட்டுவந்த விதமானது தமிழ் மக்களின் எதிர்கால இருப்பையே கேள்விக்குறியாக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.

உலகத்தாரை ஏமாற்றும் முனைப்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு திருத்த நடவடிக்கையாக கொண்டு வரப்பட்டிருக்கும் இடைக்கால வரைபிற்குள் தமிழர்களுக்கான தீர்வு இருப்பதாக வடிகட்டிய பொய்யைக் கூறியதோடு நிற்காது அவ் இடைக்கால அறிக்கை மீதான தமிழர்களின் அங்கீகாரமாக தமது வெற்றியை அர்த்தப்படுத்தும் ஏமாற்றுவித்தையை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் செய்யத் துணிந்திருந்தார்கள்.

நடைபெற்றது கிராம அபிவிருத்தியை மேற்கொள்ளும் அதிகார சபைக்கான தேர்தலாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதியில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்கும் தர்ம யுத்தமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களம் தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பொது வெளியில் பலர் பட்டும் படாமலும் குரலெழுப்பி வந்த போதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேரடி மோதலில் தனித்து களமிறங்கிப் போராடியிருந்தார்கள்.

நல்லாட்சி அரசு மற்றும் வல்லரசு நாடுகளின் ஆதரவு மற்றும் ஏலவே தமிழ் மக்களால் வழங்கப்பட்டிருந்த ஏகபிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்துடன் அதீத பலம் வாய்ந்தவர்களாக தேர்தலை எதிர்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை, உண்மை-நேர்மை-நம்பிக்கை ஆகியவற்றின் துணையுடன் எதிர்கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பெற்றிருக்கும் அடைவானது தாயக அரசியல் குறித்த கவலைநிலை போக்கி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் வழியேயான தமிழ்த் தேசிய அரசியலை சமரசமின்றி முன்னெடுத்துவந்த ஒரே காரணத்திற்காக தமிழின விடுதலை என்ற இலட்சியத்தை நோக்கியதாக தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்ட தமித்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வலு கட்டாயமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

இந்தப்பின்னணியில், கடந்து வந்த பாதை தோல்விகளாலும், நிராகரிப்புகளாலும், துரோகங்களாலுமே இட்டுநிரவப்பட்டிருந்த நிலையிலும் ஏற்றுக்கொண்ட இலட்சியத்தில் இருந்து துரும்பளவேனும் வழுவாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுத்து வந்திருந்த தூய அரசியலுக்கான அங்கீகாரமாக உள்ளூராட்சி மன்றத் தேரல் முடிவுகள் அமைந்துள்ளது.

கௌரவ முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்கள் கூறியது போன்று தம்மை அசைக்க முடியாதென்று இறுமாந்திருந்த தமிழரசு கூடாரத்திற்குள் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தாயகத் தமிழ் மக்களின் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. கண்கட்டு வித்தை முறை அரசியல் மூலம் மக்களை ஏமாற்றி, சிங்கள-சர்வதேச ஏகாதிபத்திய எசமானர்களின் நலன்களுக்கு ஒத்திசைவான போக்கில் அடிபணிவு அரசியல் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதேச்சதிகாரப் போக்கிற்கு தமது வாக்குள் மூலம் தாயகத் தமிழ் மக்கள் கடிவாளம் போட்டுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தை, தமிழர் விரோத நிலைப்பாட்டில் ஊறித்திழைத்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சிலர் கையகப்படுத்தியதன் விளைவாக ஆயுதமௌனிப்பின் பின்னரான காலத்தில் தமிழர்களின் இருப்பு மற்றும் எதிர்காலம் ஆட்டம்காணத் தொடங்கியிருந்தது. தாம் எது செய்தாலும் தேர்தல் என்று வந்தால் தமிழர்கள் பழக்கதோசத்தில் வீட்டுக்கு நேரே புள்ளடியைப் போட்டுவிடுவார்கள் என்ற மமதையுடன் செயற்பட்டுவரும் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை தேர்தல் முடிவானது தோலுரித்துத் தொங்கவிட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதியில் இரண்டு சபைகளைத் தவிர்த்து வேறெங்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத இழுபறி நிலையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளது. தோல்வி தோல்வி என தொடர் தோல்விகளில் இருந்து அதுவும் மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பினர் என்ற நகையாடல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்றிருக்கும் அடைவானது பெரு வெற்றியே. இதுவரை காலமும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் திகழ்ந்ததுடன் சிறிலங்கா ஆட்சியாளர்களின் தயவைப்பெற்று டாம்பீகமாக வாழ்ந்துவரும் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கிடைத்திருக்கும் அடைவானது பெரும் வீழ்ச்சியாகும்.

ஜனநாயகத்தில் மக்களே எசமானர்கள் என்பதையும் ஏற்றிவைத்தவர்களை கீழிறக்கவும் ஏற்றிவைக்கத் தவறியவர்களை ஏற்றிவைத்து தவறை நேர் செய்யவும் தம்மால் முடியும் என்பதனை மீண்டுமொரு தடவை இடித்துரைத்துள்ளார்கள் தாயகத் தமிழர்கள். அரசியல் ரீதியான பலம் ஏதுமின்றி கொண்ட கொள்கையில் திடமான நிலையும் தூய கரங்களுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நோக்கியதான தமிழ் மக்களின் நிலை மாற்றத்தின் அடிப்படையாகும்.

இது ஒரு தொடக்கம் மாத்திரமே. தமிழ் மக்களின் உரிமைக் குரலாக சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிப்பதற்கான முழுநிறைவான அங்கீகாரத்தை அடைவது அவசியமாகும். ஆகவே, தற்போதைய இழுபறி நிலையை முன்னிறுத்தியதான அரசியல் சதுரங்க காய்நகர்த்தல்களுக்குள் சிக்குண்டுவிடாது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் தூய அரசியல் பயணத்தை தொடர்வதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.

அத்துடன், தாயக அரசியல் வெளியில் சமரசமின்றி தமிழர் நிலையை எடுத்தியம்பி வரும் கௌரவ முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களையும் தமிழ் மக்கள் பேரவை மற்றும் கொள்கை உறுதிப்பாட்டுடன் தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கிவருபவர்களையும் அரவணைத்து ஆரோக்கியமான அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டுமென அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

About இலக்கியன்

மறுமொழி இடவும்