தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு மீண்டும் வலியுறுத்தல்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என். ஸ்ரீகாந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். நகரப் பகுதியில் உள்ள யூ.எஸ். விருந்தினர் விடுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சகல உள்ளூராட்சி சபைகளின் உறுதியான தன்மையினை அறிந்து சகல தமிழ் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அந்த ஒத்துழைப்பினை, தேவைப்படும் பட்சத்தில் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையில் வேறுபாடுகள் கிடையாது. இலங்கைக்குள் நீதியான அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதாக இருந்தால், எமது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பூரண சுயாட்சி வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது.

தென்னிலங்கையில் உறுதியற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகின்ற போதும், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வு விடயங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

தற்போதைய சூழ்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் கீழ் உறுதியான நிர்வாகத்தினை எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றோம் என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கின்றது. அனைவரும் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து மக்களுக்காக ஒரே குரல் எழுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்