இராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்!

லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற இலங்கை இராணுவ உயர் அதிகாரியை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளது.

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த இலங்கை இராணுவத்தின் 150 பேர் கொண்ட அணிக்கு லெப்.கேணல் ரத்னபுலி வசந்தகுமார ஹேவகே என்ற அதிகாரி பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் 2008-09 ஆம்ஆண்டு காலப்பகுதியில் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் என்றும், இவர் குறித்த மனித உரிமை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கரிசனை எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இவரை லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐ.நா தடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலரின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக்,

“லெபனானில் ஐ.நா இடைக்காலப் படையில் நிறுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலங்கை இராணுவ அதிகாரி, மீளாய்வு முடியும் வரை அங்கு அனுப்பப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. முழுமையான மீளாய்வுக்குப் பின்னரே, அவரை அங்கு நிறுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த இராணுவ அதிகாரியின் பின்னணி தொடர்பாக நாம் இலங்கையின் விதிவிடப் பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். அவர்கள் எமது விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார்கள். மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளை ஐ.நா மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.

கொள்கைகளின் அடிப்படையில், ஐ.நா. உடன் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் உயர்ந்த செயல்திறன், திறமை, நேர்மை ஆகியவற்றையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்களாகவும், அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருப்பதை உறுதிபடுத்த வேண்டியது எமது கடப்பாடாகும்” என்று தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்