முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி அளவீட்டிற்காக இன்று காலை அங்கு நில அளவையாளர்களும் காணி உத்தியோகத்தர்களும் அங்கு சென்றுள்ளனர். இதன்போது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் துரத்தியுள்ளார்கள்.

கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால் கிழக்கிலுள்ள 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கவுள்ளதாக கடந்த வாரம் அங்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதன் பிரகாரம் இன்று அங்கு அதிகாரிகள் சென்ற நிலையில் மக்கள் அந்நடவடிக்கையை முறியடித்துள்ளனர்.வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் மக்கள் வசித்துவந்த அரச காணிகள் என 626 ஏக்கர் நிலத்திலேயே கோட்டாபய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 500 குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளனர்.

இவற்றை விடுவிக்க வேண்டுமென மக்கள் போராடி வருகின்ற நிலையில், தற்போது அதனை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.குறித்த பகுதியை அபகரிக்க ஏற்கனவே பல தடவைகள் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்