புதுக்குடியிருப்பு சுயேட்சைக்குழு விக்கியுடன் இணைந்தது?

புதுக்குடியிருப்பில் சுயேட்சைக்குழுவாக களமிறங்கிய இளைஞர்கள், இன்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாற்று தலைமையேற்று முதலமைச்சர் முன்னால் நடந்தால், தாமும் அவரை பின்தொடர தயாராக இருப்பதாக அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. மிக சுமுகமாக சந்திப்பு நடந்தது. புதுக்குடியிருப்பு இளைஞர்களின் கருத்துக்களை ஆர்வமாக செவிமடுத்த முதலமைச்சர், இணைந்து வேலை செய்யலாமென கூறியுள்ளார். அதேவேளை, புதுக்குடியிருப்பில் உள்ளூராட்சி நிர்வாகத்தில் நடக்கும் முறையற்ற நடவடிக்கைகள் குறித்தும் இளைஞர்கள் சுட்டிக்காட்டினர். அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பில் அரசியல்ரீதியிலான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும் இருதரப்பும் இணக்கம் கண்டன. தமிழ் மக்கள் பேரவையில் சார்பிலோ, அல்லது வேறு வழியிலோ புதுக்குடியிருப்பில் விரைவில் ஒரு அரசியல் கூட்டம் நடத்தப்படலாமென தெரிகிறது.

இதேவேளை, கடந்தவாரம் புதுக்குடியிருப்பு இளைஞர்களிற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் சந்திப்பொன்று நடந்தது. முன்னணியின் சார்பில் கஜேந்திரன் கலந்துகொண்டார். புதுக்குடியிருப்பு சுயேச்சைக்குழு இளைஞர்களை தம்முடன் இணையுமாறு கஜேந்திரன் கேட்டுள்ளார். எனினும், தமது அமைப்பாக இணைந்து வேலைசெய்யலாமென இளைஞர்கள் கூறியுள்ளனர். எனினும், இதை கஜேந்திரன் ஏற்கவில்லை. இதனால் இந்த சந்திப்பு வெற்றியளிக்கவில்லை.

இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், புதுக்குடியிருப்பு இளைஞர்கள் சுயேட்சையாக களமிறங்கினார்கள். அவர்களிற்கு பல்வேறு தரப்பினரும் உள்ளூர ஆதரவு தெரிவித்தனர். அரசியல் ஆதரவாளர் நிலாந்தனும் அவர்களில் ஒருவர். சுயேட்சைக்குழுவின் அரசியல்கூட்டத்தில் உரையாற்ற வருவதாக பலமுறை அவர் வாக்களித்திருந்தபோதும், இறுதிவரை டிமிக்கி விட்டுக் கொண்டிருந்தார். முதலமைச்சர் போன்ற பிரமுகர்களுடன் புதுக்குடியிருப்பு இளைஞர்கள் கூட்டு வைத்துள்ள நிலையில், அவர்களுடன் இணைந்திருப்பதை போன்ற தோற்றத்தை காட்ட பலரும் முண்டியடிப்பார்கள் என அந்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்