அருந்தவபாலனுடன் சுமந்திரன் சந்திப்பு! – சமரசத்துக்கு முயற்சி

உள்ளூராட்சி தேர்தலின் போது தமிழரசுக்கட்சி தென்மராட்சி கிளைத் தலைவர் அருந்தவபாலனுக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை நீக்குவது தொடர்பாக அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரத்தின் இல்லத்தில் நேற்று பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரை இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சிக்கும் அருந்தவபாலனுக்கும் இடையில் உள்ளூராட்சி தேர்தலின் போது ஏற்பட்ட முரன்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், முரண்பாடுகளுக்கான தீர்வு காணப்பட்டதாகவும் தொடர்ந்தும் அருந்தவபாலன் தமிழரசுக்கட்சியுடன் தொடர்ந்து இயங்குவதற்கான சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியதாகவும் மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

மேலும் அருந்தவபாலனின் முடிவை கட்சித் தலைவர்கள் சந்தோசமாக வரவேற்றுள்ளதாகவும் குறித்த சந்திப்பின் ஊடாக தமிழரசுக்கட்சி மீண்டும் பலமடையும் என மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

அதேவேளை, தமிழரசுக்கட்சியுடனான சந்திப்பில் கட்சியுடன் தொடர்ந்தியங்குவதற்கான சாதகமான சமிக்ஞையை தான் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை மறுத்த தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி கிளைத் தலைவர் க.அருந்தவபாலன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் தான் எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்ட அவர் , தமிழரசுக்கட்சியினரின் அழைப்புக்கு அமைய சந்திப்பு இடம்பெற்றது உண்மை. குறித்த சந்திப்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

ஆனால் எவ்விதமான முடிவுகளும் எட்டப்படவில்லை. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் காலத்தில் என்னால் எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்தியங்குவதற்கான சாதகமான சமிக்ஞையையோ, சமரசத்துக்கோ குறித்த கூட்டத்தில் முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை.

ஆயினும் முன்றாம் தரப்புக்கள் ஊடாக சமரசத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் கட்சியின் நிலைப்பாட்டை பார்த்து தென்மராட்சி மக்களின் விருப்புக்கு அமைய தான் எனது தீர்மானத்தை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்