அட்டைக் கத்தி வீரருக்கு ஆலாபனை எதற்கு? மயிலையூர் ம.ஏகலைவன்!

தமிழர் தாயகத்தின் கருத்தியல் தளத்தை தமிழ்த் தேசியத்தின் வழியே வளப்படுத்தி, நெறிப்படுத்தும் வரலாற்று பணியை செவ்வனே செய்துவரும் வலம்புரி பத்திரிகைக்கும் அதன் தாங்கு தூணாக இருந்துவரும் ஆசிரியர் அவர்களுக்கும் முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தாயகத்து தமிழ்த் தேசிய அரசியலின் இயங்கு நிலை, செயற்திறன் மற்றும் செல்நெறி ஆகியவற்றில் அளவிடற்கரிய வகிபாகத்தை ஏற்றிருக்கும் வலம்புரி நாளிதழின் உண்ணத பயணத்தின் உரைவீச்சாக அமைந்திருப்பது ஆசிரியர் தலையங்கமாக வெளிவரும் மதிப்பிற்குரிய ஆசிரியரின் கருத்துப் பத்தியாகும். அவ்வாறானதொரு கனதியான உரைவீச்சு பகுதியில் 25/02/2018 அன்று இடம்பெற்றிருந்த விடயம் உண்மையில் பேரதிர்ச்சியையும் பெருத்த ஏமாற்றைத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

‘எங்களில் ஒருவராய் விடை தந்தோம் சுயந்திர விடியலில் சந்திப்போம்’ என்ற தலைப்பினை பார்த்தவுடன் செய்தித்தளங்களினூடே என்னை எந்நேரமும் இணைத்துக் கொண்டிருக்கும் விடயத்தில் தொய்வு ஏற்பட்டுவிட்டதோ என்ற பெரும் ஐயத்தினை ஏற்படுத்தியது. இந்த தலைப்பிற்கு தகுதியான பிரபலம் யாரோ இயற்கையெய்தி விட்டமைக்கான பதிவாக கருதியதாலேதான் அந்த துயரச் செய்தியை அறியாது விட்டுவிட்டேனாக்கும் எனக்கருதி அவசர அவசரமாக உரைவீச்சின் உள்ளே பாய எத்தனித்த எடுப்பிலேயே ஏமாற்றமடைந்தேன்.

‘தமிழகத்து மக்கள் எங்கள் உடன்பிறப்புக்கள் என்ற உணர்வு ஈழத் தமிழர்களிடம் எப்போதும் இருந்து வருகிறது என்று தொடங்கி எரிதணலை மூட்டி எம் ஈழத் தமிழ்ச் சகோதரர்களைக் காப்பாற்றுங்கள் என்று உலகுக்கு அழைப்பு விட்ட அந்தச் சகோதரர்களின் தியாகம் மறப்பதற்கல்ல’ என்ற உயிர்வலி கலந்த உணர்வின் வழியே யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதர் ஆ.நடராஜன் அவர்களை அடையாளப்படுத்தியது கண்டு ஏற்பட்ட வெறுப்பு சினமாக மாறியது. அதன் கொதிப்பே இந்த பதிலுரைப்பாக விரிகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து விட்டால் எல்லோரும் தமிழர்கள் ஆகிவிடலாமோ…? இல்லை ஈழத்தவர்களாகிய எமது உறவாகிவிடத்தன் முடியுமா…? கிடையவே கிடையாது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான இனவழிப்பு கொடுஞ்செயலில் இருந்து தமிழர்களையும் தமிழர் மண்ணையும் காக்கும் காப்பரணாக பலம்பெற்று நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழித்து, தமது பிராந்திய நலனை இலங்கைத் தீவில் மீள் உறுதி செய்து கொள்வதற்காக எமது மண்ணில் அமைதிப்படையென்ற போர்வையில் கால்பதித்த ஆக்கிரமிப்புப் படையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தவர்கள்தானே?

இந்திய இராணுவத்தினர் என்ற அடையாளத்திற்குள் சிறைப்பட்டு நடந்தேறிய அத்துனை கொடூரங்களிலும் பங்காளிகளாகவோ குறைந்தது பார்வையாளர்களாகத் தன்னும் இருந்திருப்பார்கள் என்பது சர்வ நிட்சயமாகும். இல்லையில்லை தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவத்தினர் சிலரோ, பலரோ மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டிருந்தனர் தானே என்று ஆறுதலைடைபவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கமாட்டீர்கள் என்று திடமாக நம்புகின்றேன்.

மேற்சொன்ன ஆறுதலடைவோரின் வாதம் உண்மையாக இருந்திருப்பின் தமது தொப்புள்கொடி உறவுகளை வேட்டையாடும் படியாகிவிட்டதென்றோ இல்லை தடுத்து நிறுத்தக்கூட முடியாத பாவிகளாக இருக்க வேண்டியதாகிவிட்டதே என்று அவர்களில் எவராவது ஆதங்கப்பட்டிருக்க வேண்டுமே. மூன்று தசாப்தங்கள் நிறைவடையும் இந்த கணம்வரை அதன் வெள்ப்பாடான செய்திகள் எதையும் நான் அறியவும் இல்லை. வெளிவந்ததாகவும் தெரியவரவில்லை.

அவ்வழியேதான் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதர் நடராஜன் அவர்களின் வருகையும் செல்கையுமாகும். சாதாரண செய்தியாக கடந்து போகவேண்டிய விடயத்தை கனதிமிக்க ஆசிரியர் பகுதிளவில் கொண்டுவந்ததன் உள்ளார்ந்த நோக்கம் எதுவோ நானறியேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் இந்த தலைப்பிற்கும் உரைவீச்சின் கனதிக்கும் சிறிதளவேனும் பொருத்தப்பாடற்ற கருவாக இது அமைந்துள்ளது.

இந்தியத் திரு நாட்டின் பிராந்திய நலன்சார் செயற்பாட்டின் ஓரங்கமாக யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத்தூதரகமும் அதன் ஆளணியும் எமது இனத்தின் மார்பில் தைத்த நெருஞ்சி முள்ளாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் சாதனையாக போகிப் பண்டிகை மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற இந்திய திணிப்புகளை எமது மண்ணில் இறக்குமதி செய்தமையே ஆகும். அதன் உச்சமாக தமிழீழத் தேசிய எழுச்சி நாட்கள் கடைப்பிடிக்கப்படும் நாட்களை குறிவைத்து கேளிக்கை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகம் அதிக கவனம் செலுத்திவருவது சம கால வராலாறாக எம்முன் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

எமது மக்களின் மன உணர்வுகளின் பிரதிபலிப்பான அறிக்கைகள், மேற்கோளிடல், பரிந்துரைகள் எவையும் இங்கிருந்து புதுடெல்கிக்கு பரிமாறப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மாறாக இந்திய உளவு அமைப்பான ‘றோ’விற்கான தகவல்கள் பரிமாறப்படுவதற்கான முகவராலாயமாக இத்துணைத்தூதுவராலயம் செயற்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

இந்திய வெளிவிவகார கொள்கையில் ஈழத் தமிழர்கள் குறித்த நிலைமாற்றம் எதையும் ஏற்படுத்தவோ இல்லை தாக்கத்தை ஏற்படுத்தவோ பயன்படாத துணைத்தூதரகத்தையும் அதில் கடமையாற்றும் துணைத்தூதரையும் தூக்கிச் சுமப்பதானது வீண் வேலையாகும். முன்னால் இந்திய பிரதமர் இராசீவ்காந்தி அவர்களின் மரணத்திற்கான உண்மைக் காரணங்களையும், காரணகர்த்தாக்களையும் நன்கறிந்திருந்த போதிலும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சாவுமணி அடித்தாவது தங்களது ஏகாதிபத்தியத்தை இலங்கைத் தீவில் நிலைநாட்டுவது என்பதற்காகவே தமிழர்களது தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தி இன்றுவரை நீடித்து வருகின்றது இந்திய அரசு.

‘வன்னி மண்ணில் நடந்த யுத்த அழிவுகளை; அதனால் ஈழத் தமிழினம் பட்ட அவலத்தையெல்லாம் அவர் கேட்டு அறிந்தும் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்தும் பரிதவித்த அந்த மனிதநேயம் கண்டு வியக்காமல் இருக்க முடியாது’ என்று கூறியுள்ளமையானது உண்மையில் கண்கட்டு வித்தைக்கு ஒப்பானதாகவே உள்ளது. எங்கள் இனத்தை அழித்த பகைவனே இந்த மண்ணில் அரசியல் செய்ய வேண்டிய பின்புலத்தில் நீங்கள் கூறிய அத்தனையையும் ஏன் அதற்கும் மேலாக வெளிப்படுத்தியவாறே உள்ளார்கள்.

நல்லாட்சி நல்லிணக்கத்தை சுமந்து இனவழிப்பு இராணுவத்தால் எமது மக்களின் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளையும் இதே கண்ணோட்டத்தில் உச்சி முகர்ந்து மெச்சத்தான் முடியுமா…? யாவும் ஒன்றே. எமது மண்ணில் கால் பதித்து எம்மை கருவறுக்கும் கயமைத்தனத்தினை எவராவது நேரடியாக செய்ய எத்தனிப்பார்களா…? இவ்வாறு வேடம் தரித்து, கண்ணீர் சிந்தி எம்மை விட எமது இழப்பிற்காக அவர்கள் அதிகமாகவே துக்கம் கொள்வார்கள்.

ஆறுதல்களும், தேறுதல்களும், கவலைகளும், அனுதாபங்களும் தேவைப்பட்ட காலம் மலையேறிவிட்டதையும் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கான நீதி உடனே கிடைத்தாக வேண்டும் அதுவே எம்மினத்தின் நீடித்த நிலையான இருப்பிற்கு ஆதாரமாகவும் அமையும் என்பதை நன்கறிந்த உங்களிடமிருந்து இவ் ஆலாபனையை எதிர்பார்த்திருக்கவில்லை.

‘யாழ்ப்பாண மண்ணில் இருந்து எங்கள் அவலங்களை அனுபவ ரீதியாகக் கண்டு கொண்டவர் நீங்கள். உங்களுக்கு எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எம் இனத்துக்காகக் குரல் கொடுங்கள். எங்கள் மீதான இந்திய தேசத்தின் தவறான கணிப்புகள் நீங்க வேண்டும். அதற்காக உங்களால் இயன்றவரை உழையுங்கள்’ என்ற வேண்டுகோளானது வெறுமனே சம்பிரதாயத்திற்கானதாக இருப்பினும் பல கேள்விகை எழுப்பியுள்ளது. ஏதோ உண்மை நிலையை தெரியாததால் தான் இதுவரை இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து அதனடிப்படையில் செயற்பட்டு வருகின்றது போன்றும் இவர் போய்த்தான் உண்மைகளை தெரியப்படுத்த வேண்டியிருப்பதாகவும் அல்லவா அர்த்தம் கொள்ளவேண்டியுள்ளது.

அமைதிப்படையாக வந்து ஆக்கிரமிப்பு இராணுவமாக விசுவரூபம் எடுத்து தமிழர்களை வேட்டையாடிய இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகளில் பலர் தமது ஓய்வு காலத்தில் எழுதிய நூல்கள் மூலமும் மேடைகளிலும் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளிலும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். அவற்றில் அதி முக்கியமாக, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுட்டுக்கொல்லுமாறு தனக்கு டெல்லியில் இருந்து கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தலைமைத் தளபதியே பல்வேறு இடங்களில் பதிவிட்டுள்ளார். இருந்தும் இராசீவ் காந்தி தலைமையிலான அன்றைய இந்திய அரசினது துரோகத்தனத்தையும் அதன் நீட்சியாக இன்றுவரை தொடரும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினையும் மாற்றியமைக்க முடியவில்லையே.

ஒரு சோடி பற்றரி வாங்கிக் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இராசீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் அவர்கள் குற்றவாளியாக்கப்பட்டு தூக்குக் கயிற்றின் நிழலில் தனது வாழ்வை தொலைத்து நிற்பதற்கு, சிபிஐ விசாரணை அதிகாரியின் திரிபுபடுத்தப்பட்ட வாக்குமூலமே காரணமாகும். இன்று அதே சிபிஐ அதிகாரி தான் தவறு இழைத்து விட்டேன். தனது தவறுதான் பேரறிவாளனின் இந்த நிலைக்கு காரணம். அவர் குற்றவாளியில்லை. திரிபுபடுத்தப்பட்ட எனது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார் என்றெல்லாம் இன்று கூறினாலும் அவை எந்த மாறுதல்களையும் ஏற்படுத்திவிடவில்லை.

இவர்கள் அனைவருமே பதவியில் இருக்கும் வரை தமது பதவியை தக்கவைப்பதற்காக மௌனமாக இருந்துவிட்டு ஓய்வுகாலத்தில் அந்திமகால ஞானம் பெற்றவர்களாக உண்மையை பேசுவதனால் எந்த பிரயோசனமும் ஏற்படவும் இல்லை. ஏற்படப்போவதும் இல்லை. அவ்வாறு இருக்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாறுதலாகிச் செல்லும் துணைத் தூதராலும் எந்த மாறுதலையும் உண்டுபண்ணிவிட முடியாது.

‘என்றோ ஒரு நாள் எங்கள் தாயகத்தில் சுதந்திரக் கொடி பறக்கும். அப்போது மேடையிம் முன்னாசனத்தில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள். அதுவரை விடைதந்தோம். எல்லாமும் பெறுக’ என்ற நிறைவு பத்தியை துணைத்தூதர் படிக்கும் போது அவரே கூச்சத்தில் நெளிந்திருக்கக்கூடும். நீங்கள் கூறியது போன்று எங்கள் தாயகத்தில் ஒருநாள் சுதந்திரக் கொடி பறக்கும் என்பது திண்ணம். ஆனால் அத்தருணத்தில் நீங்கள் கூறும் முன் வரிசையை அலங்கரிக்கும் தகுதி படைத்தோர் பலர் உள்ளார்கள். மண்ணுறங்கும் மாவீரர்களை ஈன்றெடுத்தவர்களைத் தவிர வேறெவருக்கு அந்த தகுதி உண்டு…? மற்றவர்கள் எல்லாம் இரண்டாம் நிலையில்தான். அந்த வரிசையில் அமர்வதற்கு கூட தகுதியான பலர் உள்ளார்கள். ஒவ்வொரு பெப்ரவரி-04 லும் காலி முகத்திடலில் நடைபெறும் காட்சி நிகழ்வுகளில் வேணுமென்றால் நீங்கள் கூறியவாறு இவரைப் போன்றவர்களுக்கு முன்வரிசையில் இடம் வழங்கப்படலாம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் பணியாற்றி மாறுதலாகிச் செல்லும் நடராஜன் அவர்கள் நல்ல மனிதாபிமானியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அந்த அளவில் அவருக்கான வகிபாகம் வழங்கப்பட்டிருந்தால் ஏற்புடையதே. அதைவிடுத்து எமது விடுதலையின் உடனாளராக உவமைப்படுத்தியமையே இப்பத்திக்கான விதையாகும்.

முன்னரே குறிப்பிட்டவாறு சாதாரண செய்தியாக கடந்து போயிருக்க வேண்டிய விடயத்திற்கு கொடுத்திருக்கும் அதீத முக்கியத்துவம் அட்டைக் கத்தி வீரருக்கான ஆலாபனையாகவே அமைந்துள்ளது. வேறு எவராவது எந்தத் தளத்திலாவது எழுதியிருந்தால் கண்டுகொள்ளாது விட்டுவிடலாம். வலம்புரி பத்திரிகையில் அதுவும் ஆசிரியர் பத்தியில் இவ்வாறானதொரு விடயம் இடம்பெற்றிருப்பதானது அவ்வாறு கடந்து சென்றுவிடக் கூடியதல்லவே. அந்த உந்துதலிலும் உரிமையிலும் இவ் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளேன். இதனை ஏற்று உங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தாயகத்தில் வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்ட விடயம் தொடர்பில் எழுதப்பட்ட இப்பத்தி மதிப்பிற்குரிய வலம்புரி ஆசிரியரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதனை தனது பத்திரிகையில் பிரசுரிப்பார் என்று காத்திருந்த போதிலும் இதுவரை அது நடைபெறவில்லை. அதனால் உலகத்தமிழர் பொதுவெளியில் இப்பத்தி பகிரப்படுகின்றது.

மயிலையூர் ம.ஏகலைவன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்