வடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைதல் அவசியம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

சிங்களபௌத்த பேரினவாதிகளால் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறைகளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. முஸ்லீம் சமூகத்தின் மீதான சமீபத்திய இனவாத தாக்குதலால் நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்கள் வீடற்றவர்களாகவும் குறைந்தது இரண்டு அப்பாவி முஸ்லீம்களும் படுகொலை செய்யப்பட்டனர். ஆறு நாட்களுக்கு முன்னர் வெடித்துள்ள மிருகத்தனமான தாக்குதல்கள் வன்முறை, கொள்ளையடித்தல், தீவைத்தல் மற்றும் கொலை ஆகிய கொடுஞ்செயல்களுடன் பௌத்த துறவிகளின் தலைமையிலான இனவாத கும்பல்களால் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைகளின் ஒப்புதலுடன் நடத்தப்பட்டன. சமீபத்திய முஸ்லிம் விரோதக் குற்றச்செயல்களின் நகர்வுகளைப் பார்த்தால், இலங்கையின் இனவாத அரசியலின் பயங்கரமான கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் இரக்கமற்ற இனவெறி அரசின் கொடூரமான அரசியல் கொள்கை ஆகும்.

சிங்கள பௌத்த பேரினவாதம் இசுலாமிய மக்களை நோக்கிக் குறிவைக்கத் தொடங்கியது இன்று நேற்று அல்ல. 1915 ஆம் ஆண்டில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லீம் இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையின இசுலாமியர்கள் (ஊநலடழn ஆழழசள). மே 29இல் இருந்து யூன் 5ஆம் திகதி வரை நீடித்த இந்த இனக்கலவரத்தில் பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல இசுலாமியர்களின் வர்த்தக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன. அன்றைய ஆட்சியாளர்களாக இருந்த பிரித்தானியர்கள் இந்தக் கலவரத்தை அடக்குவதற்காக டீ. எஸ் சேனானாயக்கா, எஸ். டபிள்யூ. பண்டாரநாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டாக்டர் என். எம். பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே எனப் பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அன்றைய தமிழ் தலைவாரன இலங்கையர் என்ற அடையாளச் சிந்தனையில் இருந்த சேர். பொன் இராமநாதன் அவர்கள் சிங்களவர்களுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்து இங்கிலாந்து சென்று மகாராணியுடன் பேசி, சிறைப்பிடிக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுவித்தார். நாடு திரும்பிய சேர். பொன் இராமநாதனைச் சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர். அன்றிலிருந்து தான் முதன்முறையாகத் தமிழ் பேசும் இசுலாமிய மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வித்திட்ட காலமாக அமைந்தது.

இலங்கையர் என்ற மாயைச் சிந்தனைவாதத்திற்குள் இருந்து செயற்பட்ட சேர். பொன். இராமனாதன், சேர். பொ. அருணாச்சலம் போன்ற தமிழ்தலைவர்களின் சிந்தனைவாதத்தைப் பொய்மைப்பட வைக்கும் வகையில் பௌத்த – சிங்களப் பெருந்தேசியவாதம் நகர்வதை காலப்போக்கில் தான் தமிழ்த் தலைவர்கள் உணரத்தொடங்கினர். 1915 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுடன் ஆரம்பித்த இன அழிப்பு நிகழ்சிநிரல் தமிழர்களை நோக்கிப் பாயந்து முப்பது வருட அறவழிப் போரட்டமும் முப்பது வருட ஆயுதப்போராட்டமுமாக அறுபது வருட விடுதலைப் போராட்டத்தில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் 2009 ஆம் ஆண்டு சர்வதேசத்தின் துணையுடன் இன அழிப்பிற்கு உள்ளாகி ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. இன்றும் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாகக் குறிவைக்கப்பட்டு இன அழிப்பிற்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் 1983 இல் தமிழர்களுக்கு நடைபெற்றது போல இசுலாமியர்களைக் குறிவைத்து தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இசுலாமிய மக்கள் தங்களுக்குச் சவாலாக வளர்ந்துவிடுவார்களோ என்ற சிந்தனையில் இன்று சிங்களபௌத்த பேரினவாதத்தால் தாக்கப்படுகின்றனர். நூறு வருடங்கள் ஆகியும் சிங்களபௌத்த பேரினவாதிகளின் இனக்குரோதம் நின்றுவிடவில்லை, மாறாக இனவெறித் தாக்குதல்கள் மேலும் தாண்டவமாடுவதையே சிறிலங்காவில் பார்க்கக்கூடியதாக உள்ளது.

இப்பொழுது நடைபெறும் கலவரங்களை நோக்கினால், அவை இசுலாம் மதத்திற்கு எதிரானவையா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. பௌத்தசிங்கள மேலாதிக்கத்திற்கு சவாலாகவும் போட்டியாகவும் வளர்ச்சியடையும் எந்த சமூகத்திற்கும் இப்படியான அடக்குமுறை நடைபெறும் என்பதனையே இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஐநா மனித உரிமை ஆணையாளர் கூறியது போல பத்து வருடத்திற்கு ஒருமுறை சுழற்சியாகத் தமிழ் மக்களுக்கு நடைபெறும் படுமோசமான வன்முறைகளையும் படுகொலைகளையும் இத்தாக்குதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. தமிழர்களை எப்படி பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய விடாமல் தாக்கினார்களோ அதே போன்ற கட்டமைக்கப்பட்ட வன்முறையை இப்போது இசுலாமியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

தொடர்ச்சியாகச் சிங்கள ஆட்சியில் அமர்ந்த சிங்கள ஆட்சியாளர்களே தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படைக் காரணமாவர். கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் வாழும் முஸ்லீம் சமூகத்தினரும் இதனை மிகவும் உணர்ந்தனர். இதுவே முஸ்லீம் சமூகத்தினரையும் போராட்டத்தில் மிக முனைப்புடன் இணைப்பதற்கு மிகவும் மூலகாரணமாக அமைந்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவதாக லெப்டினன் யுனைதீன் களப்பலியானார். காலப்போக்கில் முஸ்லீம் சமூகமானது இசுலாமிய சுயநலவாத அரசியல் தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு, காலங்காலமாக சிங்களத் தேசியவாதத்துடன் நின்று தனது சுயநலவாத போக்கில் இங்குமங்குமாக கட்சிகள் மாறி மாறித் தாவி தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சமூகம், தமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பியதடன் தமிழர்களும் சிங்களவர்களும் போரால் அழிந்து கொண்டிருந்த மூன்று தசாப்த காலத்தில் இனப்பெருக்கத்தையும் கூட்டிய சமூகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இவர்களின் இனவளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் சிங்கள இனவாதம் வளரவிடாது என்பது ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை வைத்தே கணிப்பிடலாம். இன்று கண்டியிலும் அம்பாறையிலும் நடைபெறுவதை மனதில் வைத்து இனிமேலாவது சிந்தித்து தமிழராய் ஒன்றுபடவேண்டும் என்பதே எமது ஆவா.

பௌத்தசிங்கள பெருந்தேசிய வாதிகளிடம் இருந்து தமிழ்பேசும் மக்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் இணைவது இன்றியமையாதது ஆகும். வடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இன அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மனம்திறந்து பேசி, வலிகளை மறந்து, ஒருவரை ஒருவர் மன்னித்து மொழியால் தமிழ்பேசும் மக்கள் என்ற கோட்பாட்டுடன் இணைவதே அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் நிரந்தரச் சமாதானமாகும். எமது அடுத்த சந்ததி சிங்கள இனவாதிகளின் பிடியில் இருந்து நிம்மதியாகவும் நிரந்தர சமாதானத்துடனும் வாழவேண்டுமாயின் காலதாமதமின்றி நற்சிந்தனையுடைய புத்திசீவிகள் ஊடாகக் கருத்துருவாங்கங்களைச் செய்யத் தொடங்கவேண்டும். இரு பகுதியினரும் இருந்து பேசித் தீர்மானித்து ஒரு தேசத்தில் சமத்துவத்துடன் வாழ்வதற்குத் தயாராகவேண்டும்.

-அனைத்தலக ஈழத்தமிழர் மக்களவை-

About இலக்கியன்

மறுமொழி இடவும்