தமிழீழ உணர்வாளர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழ உணர்வாளர் நடராஜன் இன்று காலமானார். நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்ற வேண்டும் என்கிற நிலை உருவானது. இதனை தொடர்ந்து தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த 2 உறுப்புகளையும் நடராஜனுக்கு தானமாக கொடுத்தார். உடல் உறுப்பு மாற்று ஆபரே‌ஷன் மூலமாக நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொருத்தப்பட்டன. இதன் பின்னரே நடராஜன் உயிர் பிழைத்தார். 1 மாதம் அவருக்கு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல்நிலை தேறிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி நடராஜன் வீடு திரும்பினார். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்து அவர் ஓய்வெடுத்து வந்தார். ஒவ்வொரு மாதமும் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நிலையை பரிசோதித்து வந்தார்.

இந்த நிலையில் நடராஜனுக்கு 17-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த டி.டி.வி தினகரன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் உள்ளார்.

இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக இன்று நள்ளிரவு 1.35 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

இதையடுத்து பெங்களூர் சிறையில் உள்ள நடராஜன் அவர்களின் மனைவி சசிகலா பரோலில் வர இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்