ரணிலைப் பதவி நீக்க 113 வாக்குகள் தேவையா?

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையே போதுமானது என்று மூத்த நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும், ஏப்ரல் 4ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பிரேரணையில் கூட்டு எதிரணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 55 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அதேவேளை, இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக 6 உறுப்பினர்களைக் கொண்ட ஜேவிபியும் அறிவித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற, 113 வாக்குகள் தேவையில்லை என்றும், சபையில் உள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மையானோரின் ஆதரவு இருந்தாலே போதுமானது என்றும் சிறிலங்கா நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உதாரணத்துக்கு, 100 உறுப்பினர்கள் சபைக்குச் சமூகமளித்திருந்தால், 51 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தாலேயே, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு குறைந்தபட்ச உறுப்பினர்களின் கையெழுத்து என்று எதுவும் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்