யாழ். மாநகர சபையில் கட்டித் தழுவிய குருவும் சிஷ்யனும்

யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் உம் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்காக ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அவரோடு இணைந்து தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார்.

இருவரினதும் பேச்சுக்களைத் தொடர்ந்தே ஆனோல்ட் மேயராவதற்கு ஆதரவளிக்க ஈ.பி.டி.பி சம்மதித்தது. அதன் அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி உறுப்பினர் சட்டத்தரணி முடியப்பு றெமீடியஸ் போட்டியில் இருந்து தாமாகவே விலகி ஆனோல்ட் மேயராவதற்கு உதவினார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்தவுடன் தொங்கு நிலையில் இருந்த யாழ். மாநகர சபையை யார் கைப்பற்றுவது என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி 10 ஆசனங்களையும் பெற்றுக்கொண்ட நிலையில், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஈ.பி.டி.பி கருதப்பட்டது.

இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதிலும் குறிப்பாக சுமந்திரன் எப்படியாவது தனது சிஷ்யன் ஆனோல்ட்டை மேயராக்குவதற்கு பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டார். அவரது அழுத்தத்தின் அடிப்படையில் மாவை சேனாதிராஜாவும் இவ்வாறே செயற்பட்டார்.

இவர்களோடு புளொட் சித்தார்த்தன், ரெலோ விந்தன் ஆகியோரும் இணைந்து ஆனோல்ட்டின் மேயர் கனவை நனவாக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தனர்.

இதற்காக இவர்கள் அனைவரும், துரோகி என மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவிடம் மண்டியிட்டனர்.

ஆரம்பத்தில் எதிர்ப்பது போல கதையளந்த டக்ளஸ் தேவானந்தா இறுதியில் சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் மற்றும் ரெலோ விந்தன் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்கினார்.

தமது கட்சியின் சார்பில் ஒருவரைக் களம் இறக்கி சாணக்கியமாக நடந்துகொள்வது என டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்புக்கு கூறினார்.

அப்படிச் செய்வதன் மூலம் தமது கட்சிக்கும் கூட்டமைப்பிற்கும் களங்கம் ஏற்படாது என டக்ளஸ் நம்பினார்.

ஆனால், தற்போது உண்மை வெளிவந்துவிட்டது. ஈ.பி.டி.பி தமது வேட்பாளராக றெமீடியஸை நிறுத்தியதே கூட்டமைப்பின் வெற்றிக்காக என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மாநகர மேயர் தெரிவு முடிந்த பின்னர் உறுப்பினர்களை சபையை வெளியிட்டு வெளியே முன்னர் திடீரென யாழ். மாநகர சபை சபா மண்டபத்திற்குள் நுழைந்த சுமந்திரன் அங்கு நின்ற மேயர் ஆனோல்டை கட்டித் தழுவினார். பதிலுக்கு ஆனொல்ட் உம் கட்டித் தழுவினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்