இனி கூட்டமைப்பினர் எதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பார்கள்- ஆனந்தி சசிதரன்

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் மக்களிடம் சென்று எதைச் சொல்லி வாக்கு கேட்பதென்ற நிலை எழுந்துள்ளதாக வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அத்துடன் தான் தமிழரசு கட்சியின் அடிப்படை உறுப்புரிமையுடன் உள்ளதாகவும் எனது பயணத்தை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் இவர் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் முதலமைச்சர் தலைமையில் பலமான மாற்று தலைமைக்கான அணியொன்று உருவாக்க வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பெனவும் குறிப்பிட்டார்.

அவர் தினக்குரலுக்கு அளித்த பேட்டி வருமாறு.

கேள்வி: ஜெனீவா அமர்வுக்கு தொடர்ச்சியாக சென்று வருபவர் என்ற ரீதியில் கடந்த கால கூட்டத்தொடருடன் ஒப்பிடும் போது இம்முறை நடைபெற்ற 37 ஆவது கூட்டத்தொடர் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: பெரியளவில் முன்னேற்றம் காணப்படவில்லை. எனினும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி கோரல் அல்லது பொறுப்பு கூறுதல் என்ற விடயத்தை தக்கவைத்துள்ளோம் என்றே கூறவேண்டும். 2015 செப்டம்பரில் நடைபெற்ற மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் போது கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கிய நிலையில் நிறைவேற்றப்பட்டது. அதிலுள்ள விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றவில்லையென்பதையும் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் ஜெனீவாவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

எனினும் பொறுப்பு கூறலுக்கான ஐ.நா நீதி பொறிமுறை தொடர்பில் நாடுகளின் அரசியல் நலன்சார்ந்த விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. அந்தளவில் பொறுப்புக் கூறலுக்கான தாமதிப்பு அதிகமாக காணப்படுகின்றது.

கேள்வி: ஜெனீவா அமர்வின் போது புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட்டது?

பதில்: புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு ஐ.நாவின் நிறுவன ரீதியாக இருக்கின்றதே தவிர இராஜதந்திர ரீதியான நடவடிக்கையில் பெரியளவில் காணப்படவில்லை.

உலகிலுள்ள பல நாடுகளில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினை பெரியளவில் எடுபடாத நிலைமை காணப்படுகின்றது. எனவே புலம்பெயர் தமிழர்கள் ஐ.நா.ம.உ பேரவையின் கூட்டத் தொடரின் போதான பக்க அமர்வுகளை அதிகம் நடத்துவதனை மட்டுப்படுத்தும் அதேவேளை மேற்படி அமர்வுக்கு பல நாடுகளின் இராஜ தந்திரிகளை அழைத்து தமிழ் மக்களின் நிலைமையை தெளிவுபடுத்தும் விடயத்தை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே இராஜ தந்திர ரீதியில் ஈழத் தமிழர் பிரச்சினையை உலகுக்கு முன்கொண்டு செல்ல முடியும்.

கேள்வி: வடமாகாண சபையின் காலம் செப்டெம்பருடன் முடிவடையவுள்ள நிலையில் உள்ளது. அரசியல் பயணம் எவ்வாறு அமையப் போகின்றது?

பதில்: நான் தற்பேதும் தமிழரசு கட்சியின் அடிப்படை உறுப்புரிமையுடன் உள்ளேன். இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டுமென்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். நான் அரசியல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவள் இல்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்படவே வந்தேன்.

எனவே என்னை எந்த கட்சி உள்வாங்குவது எந்த கட்சி வெளியேற்றுகின்றது என்பது தொடர்பில் எனக்கு பிரச்சினையில்லை. என்னை பொறுத்த வரையில் நான் மக்களுக்கு என்ன செய்தேன் என்பதேயாகும்.

கேள்வி: உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய தரப்புகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளமை தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் ஐக்கியமாக இணைந்து ஆட்சியமைத்து வருகின்றது. எதிர்காலத்தில் மக்களிடம் போய் எதை சொல்லி வாக்கு கேட்கப் போகின்றோம் என்ற நிலையுள்ளது. நடக்கின்றவைகளைப் பார்க்கும் போது எந்த கட்சிக்கு வாக்குப் போட்டாலும் ஒன்று என்ற நிலைமைக்கு மக்கள் மாறிவிட்டனர். கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் பலர் அதிருப்தியுடன் உள்ளனர்.

கேள்வி: உள்ளூராட்சித் தேர்தலின் போது தவறிப்போன மாற்று அணி மாகாண சபை தேர்தலுக்கு முன் ஏற்படுமா?

பதில்: தற்போதைய சூழ்நிலையில் முதலமைச்சர் தலைமையில் பலமான மாற்று தலைமைக்கான அணியொன்று உருவாக வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இத்தகைய வெளிப்பாடு மாகாண சபை தேர்தல் அண்மிக்கும் போது வெளிப்பட இடமுண்டு. இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரால் அது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போவதை நான் விரும்பவில்லை.

கேள்வி: வடமாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைய 5 மாதங்கள் உள்ளன. இந்நிலையில் மத்திக்கும் மாகாணத்துக்குமிடையிலான தொடர்பு எவ்வாறு உள்ளது?

பதில்; வட மாகாணம் முற்று முழுதாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். மாகாண புனர்வாழ்வு அமைச்சுக்கு மத்தியின் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக 5 சதம் கூட தரப்படவில்லை. எனது அமைச்சின் கீழ் உள்ள பல துறைகள் உள்ளன.

இந்நிலையில் 2018 இற்கு எனது அமைச்சுக்கு ஒட்டு மொத்த மூலதனச் செலவாக 82 மில்லியன் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வைத்து என்ன செய்ய முடியும்? கூட்டுறவுத் துறையை வளர்க்கவோ தொழில் துறையை உருவாக்கவோ முடியாது.

மாற்றுத் திறனாளிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆகியோருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க முடியுமா? போரால் பாதிக்கபட்ட மக்களுக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக வேலைத் திட்டத்தை முன்னெடுக்காது அரசாங்கம் தானே நேரடியாக செய்ய முனைகின்றது.

இந்தச் செயற்பாட்டை நோக்கும் போது கடந்த காலத்தில் சர்வதேசம் விடுதலை புலிகளை மக்களிடமிருந்து அந்நியப்படுத்த முயற்சித்ததைப் போன்று வட மாகாண சபையை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்ற செயல் திட்டமாகவே உள்ளது.

மத்தியிலும் புனர்வாழ்வு அமைச்சர் தமிழராக இருப்பதால் இரு முறை கொழும்பில் அவரைச் சந்தித்து உதவி கோரினேன் கடிதம் மூலமும் கோரிக்கை விடுத்தேன் எதுவும் நடைபெறவில்லை.

கேள்வி: நீங்கள் அமைச்சராகி 9 மாதங்களில் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள்?

பதில்: நான் அமைச்சை பொறுப்பேற்றது முதல் மகளிர் விவகாரம் ஊடாக பெண்களுக்கான வாழ்வாதாரத்துக்கு சிறிய தொழில் முயற்சிகளை உருவாக்கியுள்ளேன். நடமாடும் சேவை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உட்பட மற்றும் தேவையானவர்களுக்கு தேவையான உதவியை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

கூட்டுறவு முறையிலுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டும், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் உள்ளது.

மேலும் வட மாகாணத்துக்கான புனர்வாழ்வு அதிகார சபையை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்