முன்னாள் போராளியை விசாரணை செய்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்!

உள்ளூராட்சி தேர்தல் காலங்களில் பிரச்சார மேடைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி பேசிய புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இணைந்து புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகள் கட்சி என்ற கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்து உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டிருந்தனர்.

இவ்வாறு தேர்தல் காலங்களின் போது பிரச்சார மேடைகளில், மேற்படி கட்சியின் தலைவரான திருகோணமலையை சேர்ந்த கந்தசாமி இன்பராசா [வயது 43] என்பவர் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும், புனர்வாழ்வு பெற்ற போராளிகள் புலனாய்வு பிரிவினருக்கு அஞ்சி அவர்களுக்கு தகவல் கொடுப்பதை நிறுத்த வேண்டும் எனவும் உரையாற்றியிருந்தார்.

இந்த உரை தொடர்பில் மேற்படி கட்சியின் பொருளாளரான மற்றுமொரு புனர்வாழ்வு பெற்ற போராளியான சம்பூரை சேர்ந்த ஐயம்பிள்ளை இராஜசேகரம் என்பவரை கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு சம்பூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கட்சியின் தலைவர் பேசியது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கட்சியின் தலைவரான இன்பராச மூதூர், சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது, விசாரணை தொடர்பில் பின்னர் அறியத்தருவதாக கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார். அதன் பிறகு இதுவரை தன்னை பொறுப்பதிகாரி தொடர்பு கொள்ளவில்லை என இன்பராசா கூறுகின்றார்.

இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி அன்றும் பயங்கராவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தம்மை அழைத்து தேர்தலில் போட்டியிட்டமை, பண உதவிகள் குறித்து கேட்டதாகவும் அவர் கூறினார். மேலும் சிறிலங்கா சுதந்திர கட்சி தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சி பாடல்களை தேர்தல் மேடைகளில் ஒலிக்க விட்டு பிரச்சாரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்