விக்கினேஸ்வரனிற்கு டெலோ,புளொட் ஆதரவு!

வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் வடக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவருக்கு ஆதரவளிக்க டெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள் முடிவு செய்துள்ளன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தேசிய அமைப்பாளரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தத் தமக்கு உடன்பாடில்லையெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தல்கள் இடம்பெறவுள்ள சூழலில் வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களாக யாரை நிறுத்துவதெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் உயர்பீடம் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவதென இதுவரை கூடி ஆராயாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடுத்த வடமாகாண முதலமைச்சர் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்தாகவேயுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் இதே கருத்தை தெரிவித்துள்ளதுடன் சுமந்திரனின் கருத்தை தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே அடுத்த முதலமைச்சர் கனவில் சீ.வீ.கே.சிவஞானம் முதல் மாவை சேனாதிராசா வரை கனவிலிருக்க சுமந்திரன் அக்கதிரைக்கு களமிறக்கப்பட சாத்தியமிருப்பதாக அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்