சிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா!

2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ள அமெரிக்க காங்கிரஸ், இந்த நிதியை சிறிலங்காவுக்கு வழங்குதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

நீதிப் பொறிமுறையை உருவாக்குதல், காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வடக்கு -கிழக்கில் படைகளைக் குறைத்தல், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட சிறிலங்கா அமைதிப்படையினருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளையே அமெரிக்கா விதித்துள்ளது.

சிறிலங்காவின் ஜனநாயக திட்டங்களுக்கு 35 மில்லியன் டொலரை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது. காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணுதல் மற்றும் அடையாளம் காணுதலுக்கு உதவும் திட்டங்களுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியைப் பெறுவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு அமைய, நம்பகமான நீதிப் பொறிமுறையை சிறிலங்கா உருவாக்கியுள்ளது என்றும், சித்திரவதைகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் மீளளிக்கப்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வரவுசெலவுத் திட்ட குழுக்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் போனோர் பணியகம் உருவாக்கப்பட வேண்டும், ஆயுதப் போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும், ஆயுதப்படைகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஆயுதப்படைகளின் அளவை குறைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்துள்ளது அமெரிக்க காங்கிரஸ்.

சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்கான உதவி 5 இலட்சம் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒதுக்கப்பட்ட இந்த நிதியை மனிதாபிமான மற்றும் அனர்த்த முகாமைத்துவ, பயிற்சி, கடல்சார் பாதுகாப்புக்கு மாத்திரமே செலவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா அமைதிப்படையினரை, நீதியின் முன் நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரமே, அனைத்துலக அமைதிகாப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய பயிற்சி மற்றும் கருவிகளுக்கான எந்தவொரு அமைதிப்படை நிதியையும் வழங்க முடியும் என்றும் அமெரிக்க காங்கிரஸ் கூறியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்