வடக்கு – கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்ற சுமந்திரனின் கருத்துக்கு தமிழ் மக்கள் கண்டனம்

வடக்கு – கிழக்கு இணைக்கப்படக்கூடாது என விரைவில் தமிழ் மக்கள் கோரிக்கை விடுப்பார்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்துக்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர் தாயகம். இந்தத் தாயகம் தொடர்ந்தும் பிரிந்திருப்பதற்கு எந்தத் தமிழ் மக்களும் ஆதரவளிக்க மாட்டார்கள். தாயகத்தை இணைக்கவேண்டும் என்ற எமது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள் எனக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வியியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் போன்றோர் கடும் அதிருப்தியும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.

எமது தாயகத்தைப் பாதுகாப்பதற்காக எவ்வளவோ தியாகத்தைச் செய்திருக்கின்றோம். நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்களை அர்ப்பணத்திருக்கின்றனர். இதற்குப் பின்னரும் நாம் எமது தாயகத்தை இழக்க முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுமந்திரன் எம்.பியின் கருத்து வன்மையாகக் கண்டனத்திற்குரியது. எமது தாயகம் தொடர்பாக முடிவெடுப்பதற்கு சிங்கள அரசின் கைக்கூலியான அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

சுமந்திரனின் கருத்தை அவரது தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கருத்தும் அதுவல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் ஊடகங்கள் தொடர்பாக சுமந்திரன் முன்வைத்த கருத்துக்களுக்கு ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் பத்திரிகைகள் தாம் செல்லும் பாதையில் இருந்து 180 பாகை திரும்பி நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் தான் நீங்கள் சுதந்திரமாக நடக்க முடியும். பொய் சொல்வது பத்திரிக்கை சுதந்திரமல்ல. பொய் என தெரிந்தும் பொய்யினை கூறுவது சுதந்திரமில்லை என்று ஊடகங்களை சுமந்திரன் சாடியிருந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்