காலத்தின் அருங்கொடை பிரிகேடியர் சொர்ணம்.

காலத்தின் அருங்கொடை எங்கள் சொர்ணம்
வீரத்தின் பெரும்படை எங்கள் சொர்ணம்
பொங்கிக் குமுறும் எரிமலை சொர்ணம்
புரட்சிக் கதிரின் புத்தொளியும் சொர்ணம்.

ஈழதேசத்தின் புயலென நடந்தவனே
ஈழயாகத்தின் தீயை வளர்த்தவனே – நீ
களத்தினில் இடியாய் இறங்கிவிட்டால்
கலங்கிடும் எதிரிகள் அடிவயிறு.

எம்தலைவன் சொன்ன நெறியில் நின்று தவறியதில்லை – நீ
எதிரி ஒழிய வைத்தகுறி தப்பியதில்லை
தலைவன் எண்ணக் கருவினிற்கு உருவமைத்தவன் – நீ
தமிழ் ஈழ எல்லையெங்கும் உயிர் வேலியானவன்.

புலிச்சேனை புகழ்ந்தணைத்த மாவீரனே – நீ
புலிஎன்றால் புயல் என்று பொருள் சொன்னவன்
தமிழீழ மண்ணெங்கும் உன் சுவாசமே
தமிழர்கள் மனதெங்கும் உன்நேசமே.

எமக்காக வெங்கொடுமைக் களமாடினாய்
எமக்காகச் செங்குருதியில் நீ குளித்தாய்
நாம்கண்ட எம்ஈழ உயிர் ஆயதமே
ஆயிரம் யுகம்சொல்லும் உன் போர்வீரமே.

தென்றலும் நொந்து தேசங்கள் கடந்துவந்து
தேம்பியே உன் செய்தி சொன்னதையா
நீயின்றி ஈழத்தில் வசந்தமுண்டோ ?
நீயின்றி ஈழத்தில் இன்பமுண்டோ ?
இனியும் ஓர் சொர்ணம் பிறப்பதுண்டோ?

இனியும் ஓர் சொர்ணம் பிறப்பதுண்டோ?

யேர்மன் திருமலைச்செல்வன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்