இரையாகிப்போனது தமிழர் தாயகம்! – கதறும் தமிழர்களிடையே ஓங்கி ஒலித்த சி.வியின் குரல்

தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தொடர்ந்தும் தமிழர்களின் தாயகப்பகுதிகள் சிங்கள மயமாகும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது. திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும் இராணுவ மயமாகும் தமிழர் தாயகப் பூமியும் இதற்கு இரையாகிப் போகின்றன.

போருக்குப் பின்னரான மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் கட்டமைக்கப்பட்ட முறையினூடாக வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கென கிடைக்கும் அபிவிருத்தி நிதிகள் அனைத்தும் இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களது வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்கான பணிகளை அரசாங்கம் இன்னமும் முழுமையாக முன்னெடுக்கவில்லை.

அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பினைப் பெற்றுக் கொள்வதற்குச் சர்வதேசம் எமக்கு உதவவேண்டும். இதற்கு நாம் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகச் செயற்பட வேண்டும்.

நாம் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து எமது மக்களுக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு செயற்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்