காணி பிரச்சினையால் பொறுமையிழந்த மக்கள்

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் மீள்குடியேறிய மக்கள், விடுவிக்கப்படாமல் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும், விடுவிக்கப்பட்டமைக்கான முறையான ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்த மகஜர்கள் நேற்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்பூர், கடற்கரைச்சேனைக் கிராமத்தில் உள்ள 3 கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் எழுவர் அடங்கிய குழுவினர், கடிதங்களை மக்கள் சார்பாகச் சேகரித்து, கையளித்துள்ளனர்.

சம்பூர் பிரதேசத்திலுள்ள நான்கு முக்கிய காணிப் பிரச்சனைகள் தொடர்பான கோவைகள் மற்றும் கடிதங்களை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சம்பூர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய கிராமம் மூன்று கட்டங்களாகக் குடியேற்றப்பட்டது. முதலில் 365 குடும்பங்களும் பின்னர் படிப்படியாக 950 குடும்பங்களும் குடியேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது 818 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. எனினும் அவற்றுக்கான முறையான ஆவணங்கள் வழங்கப்படவில்லை.

அவற்றை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றும் இரண்டாவது சாயக்கர வட்டவான் என்ற பகுதியில் கடற்படையினர் கோரியதற்கிணங்க முகாமமைப்பதற்காக, 18 குடும்பங்கள் தமது 40 ஏக்கர் காணியை விட்டுக்கொடுத்தனர்.

அவற்றுக்கான மாற்று ஒழுங்குகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனாலும் படையினர் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளைப் பிடித்து வைத்துள்ளனர். அவை அனைத்தும் எமது மக்களின் வாழ்வாதாரக் காணிகள்.

மூன்றாவதாக, அனல் மின்னிலையத்துக்கென எடுக்கப்பட்ட, நீர், நிலக்கரி கொண்டுசெல்வதற்கான பாதையமைப்புக்கென 49 குடும்பங்களின் காணிகள் எடுக்கப்பட்டன.

அவையும் இன்னும் முறையாக மீளக்கையளிக்கப்படவில்லை. எனினும், மின்னிலையப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

இவை மாத்திரமன்றி கிளல்வெளி வயல்பகுதியில் சுமார் 200 ஏக்கர் உறுதிக் காணிகளை மின்சார சபை அடைத்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த பிரச்சனைகளைத் தெளிவுபடுத்தும் வகையில், ஆயிரத்துக்கும் அதிகமாக ஆவணங்களைச் சேகரித்து அதற்கான தனித்தனியான கடிதங்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்