வடமாகாணசபைக் கொடியை எப்படிப் பறக்கவிட வேண்டும் என எங்களுக்கு எவரும் சொல்லித்தரத் தேவையில்லை – முதலமைச்சர்

“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“அடுத்த ஆண்டு பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டு 10ஆவது ஆண்டாக உள்ள நிலையில் அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனுஸ்டிக்கக் கூடிய விதத்தில் அதற்கான குழுவை அமைத்து அவ் நினைவு நாளை அனுஸ்டிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம் முறை அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தலில் பல்வேறுவிதமான குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அக் குறைபாடுகள் தொடர்பாக நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நினைவேந்தலில் அக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பரந்துபட்ட மக்கள் குழு ஒன்றினால் அவ் நினைவேந்தலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வடக்கு மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என்பது தொடர்பாக எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை . இவ் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையிடுவதானது வடக்கு மாகாணத்திடம் இருக்கும் அதிகாரங்களை தாம் கைப்பற்றிக் கொள்வதற்கான முயற்சியாகும்.

வடக்கு மாகாணத்தில் வடக்கு மகாணத்தின் கொடியை எவ்வாறு பறக்கவிடுவது என்பது எங்களது விவகாரம். நாங்களே அது தொடர்பாக தீர்மானிக்கின்றோம். அதற்கு பொறுப்பானவர்களும் நாங்களே. அது தொடர்பாக மற்ற எவரேனும் எமக்கு கூறி வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கனவே மத்திய அரசாங்கம் வடக்கு மாணகாத்திற்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்துள்ள நிலையில் தற்போது இக் கொடி விவகாரத்தில் தலையிடுவதானது எம்மிடம் இருக்கும் ஏனைய அதிகாரங்களையும் மத்திய அசராங்கம் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையோ தெரியவில்லை. எனவே இவ் விவகாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை எமக்கே உண்டு.” என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்