தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அந்த ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

தமிழகத்திலும் தமிழீழத்திலும் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக இது அமைந்துள்ளது.

எனினும், இந்த ஆலையை மூடுவதற்கான உத்தரவு தொடர்பாக குறிப்பிட்டளவான மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள போதிலும், 13 உயிர்களைக் காவுகொடுத்தே இந்த ஆலையை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் அங்குள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர்.

மக்களின் போராட்டத்தை அடக்குவதற்கு தமிழகக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்தனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமன்றி, தமிழீழத்திலும் தமிழர் வாழும் சர்வதேச நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. வடதமிழீழத்தில் – யாழ்ப்பாணத்தில் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் இடம்பெற்றது.

இதேபோன்று, யாழ். நல்லூர், யாழ். பல்கலைக்கழகம், கிளிநொச்சி போன்ற இடங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவு வலுத்து வந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திலும் போராட்டங்கள் வெடித்தன. திருகோணமலை, மட்டக்களப்பிலும் அது பரந்து நடைபெற்றது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் வலியுறுத்தினர். சமூக வலைத்தளங்களிலும் இளைஞர், யுவதிகள் உட்பட பல்லாயிரண்கணக்கானோர் தமிழக அரசைக் கண்டித்தனர். சமூக வலைத்தளப் போராட்டங்கள் வேகமாக பரவின.

துணை முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் இன்று (28) தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரிடமும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியிடம் தூத்துக்குடி நிலவரம் குறித்து பகிர்ந்துகொண்டார். அதற்குப் பிறகு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் பழனிசாமி, பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாகத் தெரிவித்தார்.

அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் நல பொறியாளர் லிவிங்ஸ்டன், தூத்துக்குடி வட்டாட்சியர் சிவகாமி சுந்தரி ஆகியோர் ஆலையின் பிரதான நுழைவு வாயிலை பூட்டி சீல் வைத்தனர்.

அப்போது ஆலை தரப்பில் தலைமை பாதுகாப்பு அதிகாரி சுமித் பர்மன் அங்கு இருந்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை
லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த்
மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்