வேல்முருகன் கைதை கண்டித்து 5ம் தேதி அறப்போராட்டம்: வைகோ அறிவிப்பு!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, வரும் 5-ம் தேதி அறப்போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் அவர்கள், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களைக் காணச்சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும் தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்திற்குப் பின்னர், திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும் தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவரைச் சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகிவிடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன்.

அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மே 30 ஆம் தேதி மாலையில் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் தமிழக அரசின் காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டுள்ளது. நேற்று 31 ஆம் தேதி மனிதாபிமானமின்றி மீண்டும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர்.

தமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்கு முறையையும் கண்டித்து ஜூன் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகத் தோழர்களும், தோழமைக் கட்சியினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் பெருந்திரளாக இந்த அறப்போரில் கலந்துகொள்ள வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்