சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி – மாவையை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி – வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ். நகரில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைமையகத்தில் இருந்து யாழ். மாவட்டச் செயலகம் வரை இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

அதையடுத்து. யாழ். மாவட்ட அரச அதிபரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நேற்று யாழ். மாவட்டத்தில் அரை நாள் அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், யாழ். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் வணிக நிலையங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஏனைய பகுதிகளில் இயல்புநிலை காணப்பட்டது.

இதற்கிடையே, நேற்றைய பேரணியில் பங்கேற்கச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, பேரணியில் பங்கேற்ற சிலரால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசியல்வாதிகளை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் கோசம் எழுப்பியதை அடுத்து, அவர் வெளியேறிச் சென்றார்.

அதேவேளை, மாவை சேனாதிராசா பேரணியில் பங்கேற்றவர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டமைக்காக கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் வருத்தம் தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்