தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருக்கு நீதிமன்று அழைப்பாணை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் சார்பில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கிலேயே அவருக்கு நேற்று (11) இந்த அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பரப்புரை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசி மக்கள் முன்னணி, தமிழ் தேசிய பேரவை என்ற தேர்தல் கூட்டில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரட.ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமானது. அந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தம்மீதான அவதூறு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாமுவேல் இரட்ணஜீவன் கூல், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார். சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்மீது அவதூறாகப் பேசிய விடயத்தை தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் அதுதொடர்பில் உரிய விசாரணைவேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அவர் கேட்டிருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தேர்தலுக்குப் பொறுப்பாக இயங்கும் பிரிவுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டளை வழங்கியிருந்தார்.

சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர். முறைப்பாடு தொடர்பில் இணங்கிச் செல்வதற்கு முறைப்பாட்டாளரான இரட்ணஜீவன் கூல் மறுப்புத் தெரிவித்தார். அதனால் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினார். எனினும் எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையாகவில்லை. அவருக்கு உரிய அழைப்பாணை வழங்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

மன்றில் அனுமதி பெற்று முறைப்பாட்டாளரான இரட்ணஜீவன் கூல் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினரான எனது முறைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்கே பொலிஸார் பின்னடிக்கின்றனர்.

என் மீதான அவதூறு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுக்கவில்லை என்று தேர்தல்கள்ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் மன்றிடம் தெரிவித்தார். அதனை ஆராய்ந்த நீதிவான், வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தார்.

தான் எழுத்துமூல சமர்ப்பணத்தை மன்றில் முன்வைப்பதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார். அதனை தனிப்பட்ட சமர்ப்பணமாக முன்வைக்க உத்தரவிட்ட மன்று, வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தது. வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 6ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதிமன்று, அன்றைய தினம், சட்டத்தரணி வி.மணிவண்ணனை மன்றில் முன்னிலையாக அழைப்பாணை கட்டளையிட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்