கப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்

மன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தின் கண்ணாடிகள் இனந்தெரியாத நபர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் மூலம் கத்தோலிக்க தமிழ் மக்களை அச்சுறுத்தி இப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்க முடியாது.
நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இவ் ஆலயம் நீண்டகாலமாக வருடத்திற்கு மூன்று நான்கு தடவைகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் ஸ்ரீலங்கா காவல்துறையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும், குறித்த தாக்குதலாளிகளுக்கு பக்கபலமாக விளங்கும் அமைச்சர் ஒருவர் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது மறைமுக ஒத்துழைப்புடன் தனது செல்வாக்கை பாவித்து குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றே வருகின்றது.

மதரீதியாகவும் இனரீதியாகவும் அப்பாவி மக்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் தப்பிக்க ஒத்துழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகளை உண்டுபண்ணும் ஆபத்துள்ளது.
மேற்படி தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுவதனை தடுக்கும் வகையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படல் வேண்டுமெனவும் கோருகின்றது.

நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

About இலக்கியன்

மறுமொழி இடவும்