விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும்

விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்காக, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், பறிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன, விஜயகலா மகேஸ்வரனின் கருத்தினால் கடும் அதிருப்தியடைந்துள்ளன.

இந்த நிலையிலேயே அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிக்க இரண்டு கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது,

விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படக் கூடும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த, நவீன் திசநாயக்கவும், விஜயகலா மகேஸ்வரன் பதவியை இழக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

“விஜயகலாவுக்கு எதிராக ஐதேக முன்னெடுக்கும் ஒழுக்காற்று விசாரணைகளின் முடிவில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக் கூடும்.” என்று அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

விஜயகலாவின் அமைச்சர் பதவியை பறித்தால் மட்டும் போதாது அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சவும் அவரது அணியினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்