செம்மணிக்கு அண்மையில், கல்வியங்காட்டில் மனிதப் புதைகுழியா? எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணத்தில் செம்மணிக்கு அருகே அமைந்திருக்கும் நாயன்மார்கட்டு பிரதேசத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குடிதண்ணீர் விநியோகப் பணிகளுக்காக குழாய்களைப் பொருத்துவதற்கு வெட்டப்பட்ட குழியில் இருந்து எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படைகளுக்குமான யுத்த காலத்தில் படையினரின் முன்னரங்கு காவலரண் அமைந்திருந்த இடத்திலேயே நேற்று (20) மனித எச்சங்கள் இனங்காணப்பட்டன.

எனினும், இதனைப் பொருட்படுத்தாமல் நீர் விநியோகத்திற்காக நிலக் கீழ் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ். – கிளிநொச்சி – மருதங்கேணி குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான வேலைகள் யாழ். மாவட்டத்தில் மிக வேமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக கல்வியங்காட்டில் நிலக்கீழ் நீர்த் தாங்கி நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர்களால் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று (20) இயந்திர வலு கொண்டு நிலக்கீழ் தாங்கியைச் சுற்றி அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது அங்கு சுமார் 3 அடி ஆழத்தில் மண்ணை அகழ்ந்த போது அதற்குள் மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இதை அறிந்து தகவல் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

பின்னர் இவ்விடயம் தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான பொறியியலாளருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர், யாழ். பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் அழைத்திருந்தார்.

அங்குவந்த பொலிஸாரும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையைச் சேர்ந்தவர்களும் மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர். பின்னர் இது தொடர்பில் அப்பகுதி கிராமசேவகருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதன் பின்னரே குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போதும், அங்கு குடிதண்ணீர் விநியோகத் தாங்கி அமைக்கும் பணிகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, யுத்த காலத்தில் படையினரால் கடத்தப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட விடயம் உறுதிப்படுத்தப்பட்டது. தென்மராட்சியைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரசாமி என்ற மாணவி படையினரால் பிடிக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த விடயம் வெளியே தெரியவந்ததை அடுத்தே செம்மணியில் பலரின் சடலங்கள் புதைக்கப்பட்ட விடயம் அம்பலமானது. மேற்படி கல்வியங்காடு செம்மணிக்கு அண்மித்த பிரதேசம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்