சிறிலங்கா நம்பகமான பங்காளர் – மோடி புகழாரம்

சிறிலங்கா ஒரு அயல்நாடாக மாத்திரமன்றி, தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் குடும்பத்தில் மிகவும் சிறப்பான, மற்றும் நம்பகரமான ஒரு பங்காளராகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வடக்கு மாகாணத்துக்கு அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் காணொலி மூலம் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு நான் பயணம் மேற்கொண்ட போது, சிறிலங்கா முழுவதும் அவசர நோயாளர் காவுவண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு நான் கொடுத்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தியா மற்றும் சிறிலங்கா இடையிலான பங்குடமை அபிவிருத்தியில் இந்த நிகழ்வு மற்றுமொரு மாபெரும் சாதனையாக இதனை நான் கருதுகின்றேன்.

சிறிலங்கா ஒரு அயல்நாடாக மாத்திரமன்றி, தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் குடும்பத்தில் மிகவும் சிறப்பான, மற்றும் நம்பகரமான ஒரு பங்காளர் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த காலத்தின் கண்ணீரைத் துடைப்பதிலும் மற்றும் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதிலும் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகின்றது.

இந்தச் சேவையின் விரிவாக்கத்துடன் உள்ளூர்த் திறன்கள் மற்றும் சிறிலங்காவின் உள்ளுர் வேலைவாய்ப்புகள் என்பன ஓர் ஊக்குவிப்பையும் பெறும்.

மேலும் நல்லது மற்றும் கெட்டது ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் சிறிலங்காவுக்கு முதலில் துணையாக இந்தியா இருந்ததுடன் அவ்வாறே என்றும் தொடர்ந்தும் இருக்கும்.

சிறிலங்கா மக்கள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சிகளையும் பாராட்டுகின்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்