தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

தமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டதுதான் தமிழ்ப் பிரதேசங்களில் முனைப்புடன் செயற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள். தொடர்ச்சியாக இருக்கும் தமிழர் பாரம்பரிய நிலப்பரப்பைக் கூறுபோடும் தந்திரோபாயமே சிங்களக் குடியேற்றங்கள். இலங்கையை சிங்களவர்களுக்கே உரிய பௌத்த நாடாக்கும் நோக்கில் நீண்டகாலத்திட்டமாக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள்.

மகாவலித்திட்டமானது 1961ம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும். நில அபகரிப்புடன் கூடிய சிங்களக் குடியேற்றங்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த வழியாக இருக்கும் என மதிநுட்பத்துடன் வகுக்கப்பட்டது. மகாவலிகங்கைத் திட்டத்தை உருவாக்கும்போது சிங்களத்தால் வரண்ட பிரதேசங்களுக்கான நீர்ப்பாசனம், மின் உற்பத்தி நிலையங்கள் என்று பல திட்டங்களைக் கூறி ஐநாவில் இருந்து நிதி எடுக்கப்பட்டது. 1964ம் ஆண்டு ஐநாவால் (UNDP) US$ 1.146.000 நிதி வழங்கப்பட்டது. நிதி கிடைக்கப்பெற்றதும் இந்தத்திட்டத்தின் வேலைகள் முழுமூச்சுடன் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு படித்த சிங்கள இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டு இத் திட்டத்தை ஆரம்பித்தார் சிறிமாவோ பண்டாரநாயக்கா. நீதியான அரசாக இருந்திருந்தால் அந்தந்தப் பிரதேச மக்களுக்கு உரிய பயிற்சிப்பட்டறைகளை நடாத்தி, வேலை வாய்ப்பைக்கொடுத்து அந்தப் பிரதேச மக்களையே குடியமர்த்தியிருப்பார்கள், மாறாக தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு சிங்களவர்களுக்கே முதலிடம் வழங்கப்பட்டது.

முதலாவது பகுதி 1965ம் ஆண்டு கள ஆய்வாகவும் இரண்டாவது பகுதி 1967ம் ஆண்டும் தொடங்கப்பட்டது. சிறிமாவிற்குப் பின்பு பிரதமராக இருந்த டட்லி செனனாயக்கா மகாவலித் திட்டத்தை மேலும் துரிதமாகச் செயற்படுத்தினார். மகாவலித்திட்டத்தின் ஊடாகக் கிடைத்த நிதியுதவியுடன் தெற்குப் பகுதிகள் மிகத் துரிதகதியில் முன்னேற்றப்பட்டன.

மணலாற்றுப் பகுதியில் தமிழர்களால் நடாத்தப்பட்ட சிலோன் பாம், டொலர் பாம் கென் பாம் காலப்போக்கில் ஜே. ஆர். ஜெயவர்தன அரசில் தமிழர்களை வலுக்கட்டாயமாக விரட்டி விட்டு சிங்களவர்கள் பறித்துக்கொண்டனர். திருகோணமலைக்கும் முல்லைத்தீவிற்கும் இடையில் அமைந்துள்ள இதயபூமியைக் கைப்பற்றுவதன் ஊடாக தமிழர் பாரம்பரிய தொடர் நிலப்பரப்பைத் துண்டாடுவதே சிங்களத்தின் நோக்கமாக இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் எழுச்சி அடைந்த காலத்தில் சிங்களத்தின் குடியேற்றத்திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டது. அந்தக்கால கட்டத்தில் தான் தமிழர்கள் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்பட்டன.

2016 சூன் மாதம் ஆவிசாவளை கொஸ்கம – சாலவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக்களஞ்சியம் வெடித்துச் சிதறியதில் பாதிக்கப்பட்ட அத்தனைச் சிங்களக் குடும்பங்களுக்கும் உடனடியாக நட்டஈடும் கொடுத்து புதிய வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டது. சிங்களவர்கள் பாதிக்கப்பட்டால் விரைந்து செயற்படும் இனவாத அரசு இப்படியான கரிசனையை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் காட்டுவதில்லை.

2009ம் ஆண்டு ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின் பேரினவாதம் தலைதூக்கி தனது கோர முகத்தை மீண்டும் காட்டத்தொடங்கியுள்ளது. «நல்லாட்சி» என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் ரணில்-மைத்திரி அரசு தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவோம் என்று கூறியவண்ணம் மறுபுறத்தில் தமிழர்களின் இருப்பை ஒழிப்பதிலேயே குறியாக இருக்கின்றது இந்த பேரினாவாத அரசு. சந்திரிக்கா அம்மையார் மற்றும் மஹிந்த ராஐபக்ச அரசுகளில் மகாவலித் திட்டத்தை அதிகம் கையாண்டவர் வேறு யாரும் அல்ல இதே மைத்திரி பால சிறிசேன தான் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. மகாவலி கங்கைத்திட்டத்தில் புதைந்து கிடக்கும் பேரினவாதக் கொள்கையானது தமிழர்களை இனவழிப்புச் செய்வதற்காகவே தீட்டப்பட்டது.

ஒற்றையாட்சி அரசியல் அடிமைகளாக இருக்கும் கதிரை நாயகர்களான கூட்டமைப்பினர் மைத்திரி – ரணில் அரசால் 2016ல் (6950 கோடி), 2017ல் (5763 கோடி), 2018ல் (4562 கோடி) வரவு செலவுத் திட்டங்களை எவ்வித கேள்வியும் இன்றி முழுமையாக ஆதரித்தார்கள். வாக்குப்போட்டு பாராளுமன்றம் அனுப்பிய தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது கூட்டமைப்பு. அரசியல்வாதிகளை நம்பிப் பிரபோசனம் இல்லை என்பதை நிரூபிக்கவே இந்த வாரம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பேரெழுச்சியை ஏற்படுத்தி உள்ளனர். இனி மக்கள் புரட்சி ஒன்று ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்பது உறியாகின்றது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கூற்றுப்படி மணலாறு பறிபோனால் ஒட்டுமொத்த தமிழர் தேசமுமே பறிபோனதிற்குச் சமம். ஆகவே களத்திலும், புலத்திலும் போராட்டங்கள் வெடிக்க வேண்டும். சர்வதேசம் தமிழருக்குச் செய்த துரோகத்தை அவர்கள் முற்றத்தில் நின்றே கேட்போம். ஓட்டுமொத்தத் தமிழர்களும் பேரெழுச்சி கொண்டால் மட்டுமே இப்படியான பூர்வீக நில அபகரிபுகளை நிறுத்த முடியும். களமும் புலமும் நேர்கோட்டில் பயணித்தால் மட்டுமே ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிட்டும். ஆகவே தாயக மக்களை ஒரு தேசியமாகச் சிந்தித்துச் செயற்பட வைக்க எல்லா அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

ஐநாவில் நடைபெறவிருக்கும் 38 வது மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு எதிர்வரும் 17 ம் திகதி செப்ரெம்பர் மாதம் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பொங்குதமிழ் நிகழ்வில் அனைத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளிற்கு எதிராகக் குரல் கொடுப்போம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

About இலக்கியன்

மறுமொழி இடவும்