இழுத்தடிக்கும் விக்னேஸ்வரன் – இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலும் பழைய பல்லவியை பாடிய முதல்வர்!

கட்சி அரசியலை விடுத்து, தமிழ் மக்கள் பேரவையை ஓர் மக்கள் பேரியக்கமாக மாற்றுவதே தற்காலத்திற்குச் சிறந்த வழி என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திடம் எமக்கான தீர்வொன்றினை முன்வைத்துப் பெற முயற்சிக்கும் வழியே தற்காலத்தில் சாதகமான முடிவாகத் தென்படுகின்றது.

பல நாடுகளில் கட்சி சாரா இயக்கங்கள் பல்வேறுபட்ட அரசியற் தீர்வுகளை முன்வைத்துப் போராடி வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே இன்றைய இந்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் இது தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.

இந்நிலையில் புதிய கட்சி தொடங்குவது என்பது இலகுவான விடயம். ஆனால் கட்சியினைக் கொண்டு நடத்துவது மிகவும் சிரமமான விடயம். தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பில் நான் தற்போது மிகவும் ஆழமாக ஆராய்ந்து வருகின்றேன்.

இவ்விடயம் தொடர்பில் அனைத்துத் தமிழ்த் தேசியக் கொள்கை சார்ந்த அமைப்புக்களுடனும், மக்களுடனும் தமிழ்மக்கள் பேரவையின் உறுப்பினர்களுடனும் விரிவாக நான் ஆராயவுள்ளேன்.

வரலாறு எனக்கு வழங்க முன்வந்துள்ள தலைமைப் பாத்திரத்தினை ஏற்று முன்செல்லத் தயாரா என தமிழ் மக்களும் தமிழ் மக்கள் பேரவையும் என நீண்ட காலமாக கேட்டு வருகின்றனர்.

இதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் எனக்கு உள்ளது. எனவே இது தொடர்பான முடிவினை விரைவில் அறிவிப்பேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்