பிரான்சு Strasbourg நகரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் இடம்பெற்ற நீதிக்கான ஈருருளிப் பயண கவனயீர்ப்பு!

கடந்த 1ம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணமும், பிரான்சில் இருந்தது கடந்த 3 ஆம் திகதி அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணமும் ஒன்றாக நேற்று (11.09.2018) செவ்வாய்க்கிழமை காலை பிரான்சு Phalsbourg நகரத்தின் மாநகரசபை முதல்வரை சந்தித்தபின்னர் நேற்று மதியம் பிரான்சு Strasbourg நகரில் உள்ள ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றிலை அடைந்து அங்கு கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து நீதிக்கான ஈருருளிப் பயண குழுவினருக்கும் ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஐரோப்பிய ஆலோசனை சபை மண்டபத்தில் இடம்பெற்றதுடன், தமிழ்மக்களின் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தபின்னர், தொடர்ந்து ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றபோது, வழியில் குர்திஸ்டான் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்களை குர்திஸ்டான் மக்கள் பிரதிநிதிகள் வரவேற்று குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்ததுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்து வழியனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்னர் நீதிக்கான ஈருருளிப் பயண கவனயீர்ப்பு நிகழ்வு மாலை 18.00 மணிவரை இடம்பெற்றது. இதன்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த கவனயீர்ப்பு நிகழ்வை அவதானித்துச்சென்றதுடன், கவனயீர்ப்பு போராட்டத்தின் நோக்கம் அடங்கிய ஆங்கில, பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரங்களையும் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து மாலை 18.00 மணியளவில் ஜெனிவா நோக்கி மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் புறப்பட்டுச்சென்றது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

About இலக்கியன்

மறுமொழி இடவும்