தமிழீழ மாவீரர் நாள் தொடர்பான வேண்டுகோள்!

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல்கள் தொடர்பில் விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகள் கூட்டு கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் முன்னாள் மூத்த போராளிகளான பாலிப்போடி சின்னத்துரை(மட்டக்களப்பு), முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா – யாழ்ப்பாணம்) மற்றும் ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் – திருமலை) ஆகியோர் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கடந்த ஆண்டு நிகழ்ந்த மாவீரர் நாள் நினைவேந்தல்களில் சுயகட்டுப்பாட்டுடன் உணர்வு பூர்வமாகப் பங்குபற்றிய அனைவருக்கும் எமது நன்றிகள். அதே போல் இந்த ஆண்டு நிகழ்வுகளும் தடம் புரளாமல் நடைபெற வேண்டுமென நாம் விரும்புகிறோம். எனினும் நினைவேந்தல் நிகழ்வுகளைப் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்த முனைவதை நாம் உணர்கிறோம். அதனைத் தவிர்த்து இந் நிகழ்வுகளின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலவிடயங்களைக் கவனத்திற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

கடந்த ஆண்டு திலீபனின் நினைவு நாளில் தூக்குக்காவடி எடுத்தார் ஒருவர். திலீபன் எம்முடன் வாழ்ந்தவர்.நாம் மூவரும் அவருடன் நன்கு பழகியவர்கள். நினைவேந்தல் நிகழ்வுகள் இவ்விதம் பாதை மாறிப் போவதை திலீபனின் ஆன்மா நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. எனினும் உணர்வு மேலீட்டால் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் எனக் கருதினோம். சிறிது காலத்துக்குள்ளேயே அவர் அரசியல் கட்சியொன்றின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அரசியலில் ஈடுபடுவது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. எனினும் தம்மைப் பிரபல்யப்படுத்துவதற்காக இவ்வாறான மலினப்படுத்தும் முயற்சிகளைக் கைவிடுமாறு வேண்டுகிறோம். கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்ல.

கடந்த ஆண்டு போலவே மாவீரரின் பெற்றோரோ திருமணமாகிய மாவீரராகின் மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, முதன்மைச் சுடரை ஏற்றட்டும். இவ்விடயத்தில் மாவீரரின் பதவி நிலைகளைக் கவனத்திலெடுக்கத் தேவையில்லை. பிரிகேடியர் முதல் போருதவிப் படைவீரர் வரை அனைவரும் சமமாகவே அருகருகே விதைக்கப்பட்டுள்ளனர். எல்லோரையும் ஏற்றுக்கொண்டது எமது மண் .

துயிலுமில்லப் பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், பொது அமைப்புக்கள், மாவீரர் குடும்பத்தினர்அடங்கிய ஒரு குழுவினை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்த நாளின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டுமென்பதற்காக தலைமை எந்தக் கட்சியினதும் சார்பாக அமைந்து விடக்கூடாது எனக்கருதுகிறோம். அரசியல் வாதிகளும் எமது மக்கள் மத்தியில் இருந்து உருவானவர்களே. நெருக்கடியான நேரங்களில் அவர்கள் செய்த பங்களிப்பை நாம் நிராகரிக்க வில்லை. எனினும் இந்த நாளின் நோக்கம் திசை திரும்பக் கூடாது.என்ற எமது கரிசனையை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம். அவர்களின் பங்களிப்பு எனும்போது அதனை மீளளிக்குமாறு கோரும் எவரதும் தொடர்பும் வேண்டாம்.இதனைக் கூறச் சற்றும் தயங்கத் தேவையில்லை.

இளைய தலைமுறையினரின் தலைமைப் பண்பை விருத்தி செய்யும் முகமாக மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தினரதும், கோப்பாயில் யாழ். பல்கலைக்கழக மாணவரினதும் பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்புகிறோம். இந்தத் துயிலுமில்லங்களுக்கான செயற்பாட்டுக் குழுவை அமைக்கும் போது எமது வேண்டுகோளைக் கருத்திற் கொள்ளவும்.

வருடா வருடம் மாணவரவை நிர்வாகம் மாறிக்கொண்டே போகுமென்பதால் அடுத்த தலைமுறை மாணவர்கள் கடந்த வருடத்தை விட இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டுமென்பதில் ஆர்வமாக இருப்பார்கள்.

யுத்த காலத்தில் வௌ;வேறு மாவட்டங்களில் உள்ள துயிலுமில்லங்களில் மாவீரர் விதைக்கப்பட்டனர்.தற்போது பெற்றோர் தமது சொந்த மாவட்டங்களில் வசிக்கின்றனர். இவர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் குறித்துக் கவனமெடுக்கவேண்டும். களத்தில் அருகருகே இருந்து சமராடியவர்கள் எமது பிள்ளைகள்.ஒருவரைக் காப்பாற்ற இன்னொருவர் தமது உயிரை இழந்தோ காயமடைந்தோ இருந்தனர். பிள்ளைகளுக்கிடையே இருந்த நட்பு பெற்றோருக்கும் தொடரட்டும் .வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பெற்றோரை எமது உறவினராகக் கருதி உபசரியுங்கள்.

மாவீரர் கௌரவிப்பு நிகழ்வுகளில் உரையாற்றுவோர் எந்த ஒரு அரசியற் கட்சியினையும் சாடக் கிடைத்த சந்தர்ப்பமாக இதனைக் கருத வேண்டாம். கடந்த ஆண்டு ஓரிரு நிகழ்வுகளில் நடைபெற்ற விடயங்களைக் கருத்திற் கொண்டே இந்த வேண்டுகோளை விடுக்கிறோம் .

கடந்த ஆண்டைப்போலவே எவரது உரையும் தேவையில்லை.ஒரேயொரு துயிலுமில்லத்தில் அரசியல் வாதி ஒருவர் இடைச்செருகலாக உரையாற்றியிருந்தார்.நிச்சயமாக அவரைவிட மாவீரர் ஈகம் குறித்து அங்கு கூடியிருந்தோருக்கு கூடுதலாகத் தெரியும்.

சுடரேற்றிவிட்டு திரும்பும் போது முன்னர் எந்த மனநிலையில் பெற்றோர் உறவினர் இருந்தனரோ அவ்வாறே கருமங்கள் நடைபெறட்டும். மேலதிகமாக எந்த நிகழ்வுகளும் தேவையில்லை என்பது எமது அபிப்பிராயம். வலிந்து எந்தத் தரப்பினரோடாவது முரண்பாடுகளை ஏற்படுத்த முனையும் சக்திகளை இனங்கண்டு சாதுரியமாகவும் நினைவு நாளின் மாண்பு குறையாமலும் நடந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

துயிலுமில்லச் சூழலில் நேர்காணல் செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஊடகவியலாளர்களை வேண்டுகிறோம். விரும்பத்தகாத வார்த்தைப் பிரயோகங்களோ , வினாக்களோ அந்தப் புனிதமண்ணில் கேட்பது உகந்ததல்ல என்பது எமது தாழ்மையான அபிப்பிராயமென தெரிவித்திருந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்